சிஸ்டம் சரியில்லை என்று பேசுபவர் திருடிக் கொண்டு போகிறார் – ஆர்.வி.உதயகுமார் பரபரப்பு பேச்சு
எஸ்.விஜயசேகரன் எழுதி இயக்கியிருக்கும் படம் எவனும் புத்தனில்லை.இந்தப் படத்தில் நபி நந்தி,சரத் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.கதாநாயகிகளாக சுவாசிகா, நிகாரிகா ஆகியோருடன் கெளரவ வேடத்தில் பூனம் கவுர் நடிக்கிறார்.
இவர்களோடு, கெளரவ வேடத்தில் சினேகன், நான் கடவுள் ராஜேந்திரன் சங்கிலிமுருகன் எம்.எஸ் .பாஸ்கர் வேல.ராமமூர்த்தி சிங்கமுத்து முரு ஆரு கே.டி.எஸ்.பாஸ்கர் மாரிமுத்து பசங்க சிவக்குமார் சுப்புராஜ் எம்.கார்த்திகேயன் காதல் சரவணன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்துக்கு ஒளிப்பதிவு ராஜா சி.சேகர், இசை மரியா மனோகர்,படத்தொகுப்பு சுரேஷ் அர்ஸ்,பாடல்கள் சினேகன்
வசனம் எஸ்..சுரேஷ்குமார்.
வி சினிமா க்ளோபல் நெட்வொர்க்ஸ் வழங்கும் இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஆர்.வி உதயகுமார் பேசியதாவது,,,,,
முதலாவதாக இந்தப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் விஜயசேகரன் அவர்களுக்கு வாழ்த்துகள். நாங்களும் நிறைய விசயங்களைப் பேசிக்கொண்டே தான் இருக்கிறோம். ஆனால் தீர்வு கிடைக்க மாட்டேன்கிறது. எவனும் புத்தனில்லை சந்தர்ப்பம் கிடைக்காத வரை. வாய்ப்பு கிடைக்காத வரை நாம் அனைவரும் புத்தனாக இருக்கலாம். நல்லவனா கெட்டவனா என்றால் இந்த மேடையில் யாருமே இருக்க முடியாது.
இந்த இயக்குநர் பங்ஷன் நடத்துறதிலேயே கில்லாடியா இருக்கிறார். அதனால் படத்தையும் நல்லா எடுத்துருப்பார் என்று நம்புகிறேன். இப்படம் பிரமாதமா வந்திருக்கு.
சினிமா என்பது மிகப்பெரிய ஆளுமை கொண்ட ஊடகம். அப்படியான சினிமாவில் சிஸ்டம் சரியில்லை. சிஸ்டம் சரி செய்கிறேன் என்று வருபவர்கள் கூட திருடிக் கொண்டு போய்விடுகிறார்கள்.
நடிகர்கள் கட்சி ஆரம்பித்து நாட்டைக் காப்பத்துவதை விட அவர்கள் வளர்ந்த, அவர்களை வளர்த்த சினிமாவில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்யலாம். இப்பவும் சொல்றேன் பெரிய சம்பளம் வாங்கும் நாலு நடிகர்கள் ஒண்ணா உட்கார்ந்து பேசினாலே சினிமாவில் இருக்கும் சிக்கல்கள் தீர்ந்துவிடும்.
தியேட்டரில் இருந்து வரும் டிக்கெட் ஷேரை விட பாப்கார்ன் காசிலும் நமக்கு பங்கு வந்தால் சிறுபட தயாரிப்பாளருக்கு வருமானம் வரும்.
தமிழ்சினிமாவில் தான் நிறைய நல்ல கிரியேட்டர்ஸ் இருக்கிறார்கள். இப்போது சினிமாவில் ஒரு குடும்பம் என்ற உணர்வு என்பது இல்லாமல் இருக்கிறது.
கேரவன் என்ற கலாச்சாரம் எப்போது வந்ததோ அப்போதே நமக்குள் பிளவு வந்துவிட்டது. ரஜினி எஜமான் படத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் தென்னஓலையை போட்டுப் படுத்துக் கொள்வார். அவ்வளவு எளிமையான மனிதர் அவர். அவரை எல்லாம் நம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அழைத்தால் வருவார்.
இப்படத்தில் சினேகன் பிறந்தபலனை அடைந்து விட்டார்..அவர் பதினைந்து பெண்கள் மத்தியில் மிதக்கிறதைப் பார்த்தால் அவ்வளவு அழகாக இருக்கிறது. இந்தப்பங்ஷன் மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. அதுபோல் படமும் வெற்றிபெறும்” என்றார்
இயக்குநர் ஆர்.கே செல்வமணி பேசியதாவது,
முதல்ல இந்த மேடை நிறைந்திருப்பதற்கு காரணம் இயக்குநர் விஜயசேகரன் சேமித்து வைத்திருக்கும் நட்பு தான். என் 29 வருட அனுபவத்தில் இவ்வளவு கஷ்டப்பட்டு ஒருவர் படம் எடுத்ததில்லை என்று சொல்வேன். விஜயசேகரன் அவ்வளவு சிரமப்பட்டிருக்கிறார். அந்த சிரமத்திற்கு நிச்சயமாக வெற்றி கிடைக்கும்.
இந்தப்படத்திற்கு துணை நின்ற எல்லா டெக்னிஷியன்களுக்கும் நன்றி. இப்படத்தின் பாடல்களை திரையில் பார்க்கும் போது படத்தையும் பார்க்க வேண்டும் என்று ஆவல் வருகிறது.
திரைப்பட சங்கங்களில் இருக்கும் பிரச்சனைகளைப் பற்றி பலரும் பேசினார்கள். எனக்குப் பேசிப்பேசி அலுத்துவிட்டது. நாங்கள் படம் எடுத்த காலங்களில் தயாரிப்பாளர்கள் நல்லா இருந்தார்கள். உழைக்கிற எல்லாருக்கும் சரியான கூலி கொடுத்தால் பிரச்சனை இல்லை.
இந்தத் திரைப்படத்துறையை யாராலும் அழிக்க முடியாது. அதேநேரம் இந்தத் திரைப்படத்துறையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.
மக்களால் அங்கீகாரம் பெறப்பட்ட படங்களுக்கு விருதுகள் அளிக்கப்படவில்லை. மத்திய மாநில அரசுகளுக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை. படங்களுக்கு பெரிய எதிரி இண்டெர்நெட் தான். அது அரசாங்கம் கையில் தான் இருக்கிறது. எவனும் புத்தனில்லை என்ற தலைப்பு மிகவும் சிறந்த தலைப்பு. சினேகன் பாடலாசிரியர் அல்ல..பாவை ஆசிரியர்” என்றார்
இயக்குநர் விஜயசேகரன் பேசியதாவது,
என் வாழ்க்கையில் மிக முக்கியமான இரண்டு இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், ஆர்.கே செல்வமணி அண்ணன்கள் தான். இந்தப்படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.
கவிஞர் சினேகன் இந்தப்படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்கள் எல்லாம் அவர்கள் வாழ்வின் பொன்னான நேரத்தை இந்த நிகழ்வுக்கு வழங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி.
வாழ்றதே ஒரு கஷ்டம் தான். நாம் எதை அடையணும்னு நினைக்கிறமோ அதுக்கான விலையைக் கொடுத்து தான் ஆகணும். படத்தை அனைவரும் திரையில் வந்து பாருங்கள் என்றார்.
இவ்விழாவில் படக்குழுவினரோடு, இயக்குநர் மீராகதிரவன், ராசி அழகப்பன், நடிகர் ஆரி,தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.











