சினிமா செய்திகள்

இந்தியன் 2 தொடர்பான அடுத்த ஒப்பந்தம் – அலறும் ஷங்கர்

ரஜினி நடித்த 2.ஓ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில். கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படம், சனவரி 18,2019 அன்று சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்கியது.

அன்றே படப்பிடிப்பும் தொடங்கியது. நான்கு நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடந்தது.

அப்போது எடுக்கப்பட்ட காட்சிகளில் கமலின் ஒப்பனை பொருத்தமில்லாமல் இருந்திருக்கிறது.எனவே அதைச் சரி செய்து படப்பிடிப்பு தொடங்கும் என்றார்கள்.

அதன்பின் கமல் அரசியல் வேலைகளில் ஈடுபட்டதால் படப்பிடிப்பு தாமதம் என்றார்கள்.

இந்தக் காரணங்கள் உண்மை என்றாலும் இதைத் தாண்டி ஒரு பெரிய விசயம் நடந்திருக்கிறது.

படப்பிடிப்பு தொடங்கியவுடன் நிறுத்தியதோடு, கமலின் ஒப்பனை உட்பட கூடுதலாக செலவு பிடிக்கும் சில விசயங்களைச் செய்ய வேண்டும் என்று இயக்குநர் ஷங்கர் கேட்டிருக்கிறார். இதனால் லைகா நிறுவனம் அதிர்ச்சி அடைந்துவிட்டதாம்.

உடனே, இவ்வளவு தொகைக்குள் இந்தப்படத்தை எடுத்து முடிப்பேன் அதற்கு மேல் செலவானால் அதற்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று ஒரு ஒப்பந்தம் தயாரித்து ஷங்கரிடம் கொடுத்து கையெழுத்து கேட்டார்களாம்.

13 படங்கள் வரை இஷ்டத்துக்கு எடுத்து வந்த ஷங்கர் 14 ஆவது படத்தில் இப்படி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடும் நிலைக்கு ஆளாகிவிட்டோமே என்று அதிர்ந்த ஷங்கர், சில நாட்கள் யோசனைக்குப் பிறகு அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டாராம்.

அதோடு சிக்கல் முடிந்ததா? என்றால் இல்லையாம். இவ்வளவு செலவுக்குள் படம் எடுப்பது சரி, அதை எப்போது முடித்துக் கொடுப்பீர்கள்? என்று கேட்டபோது பிடிகொடுக்காமல் நழுவினாராம் ஷங்கர்.

இதனால் படத்தின் வெளியீட்டுத் தேதி ஒன்றைக் குறிப்பிட்டு, இந்தத் தொகைக்குள் முடிக்கவேண்டும் என்று ஒப்பந்தம் போட்டாயிற்று, அடுத்து இந்தத் தேதிக்குள் முடிக்கவேண்டும் என்று இன்னொரு ஒப்பந்தம் தயார் செய்து அதில் கையெழுத்திடக் கேட்கிறார்களாம்.

இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த ஷங்கர், அதற்குப் பதில் சொல்லாமல் காலம் கடத்தி வருகிறாராம். என்ன நடக்கிறதெனப் பார்ப்போம்.

Related Posts