கைவிட்ட கலைஞர் டிவி கலக்கத்தில் சந்தானம் படக்குழு
சந்தானம் கதாநாயகனாக நடித்த படம் வடக்குப்பட்டி இராமசாமி.இப்படத்தில் நாயகியாக மேகா ஆகாஷ் நடித்திருந்தார். இவர்களுடன், மாறன், சேசு,எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ரவி மரியா, நிழல்கள் ரவி, நான் கடவுள் ராஜேந்திரன், கூல் சுரேஷ்,பிரசாந்த், ஜாக்குலின், கல்கி உள்ளிட்டோரும் நடித்திருந்தார்கள்.
கார்த்திக்யோகி எழுதி இயக்கியிருந்தார். இவர் ஏற்கெனவே சந்தானம் கதாநாயகனாக நடித்த டிக்கிலோனா படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம்.பிப்ரவரி 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
வெளியான நேரத்தில் கலவையான விமர்சனங்களையும் சுமாரான வசூலையும் பெற்றது.
ஆனால் வெளியீட்டுக்கு முன்பே இப்படத்தில் இடம்பெற்ற ஒரு வசனத்தால் சர்ச்சைக்குள்ளானது. தந்தை பெரியாரை கேலி செய்வதாகப் புரிந்துகொள்ளப்பட்டதால் சர்ச்சை உருவானது.
அதன்விளைவாக அப்படத்தைத் தமிழ்நாடெங்கும் திரையரங்குகளில் வெளியிடுவதாக ஒப்புக்கொண்ட ரெட்ஜெயண்ட் நிறுவனம் பின்வாங்கியது.அதேசமயம் அந்நிறுவனத்தோடு தொடர்புடையவர்கள்தாம் அப்படத்துக்குத் திரயரங்குகள் ஒப்பந்தம் செய்தார்கள் என்று சொல்லப்பட்டது.
இப்பட வெளியீட்டுக்கு முன்பே இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி பெற்றுவிட்டது என்றொரு தகவல் உலா வந்தது. ஆனால், அதில் உண்மையில்லையாம்.இப்போது வரை அப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை விற்பனையாகவில்லையாம்.
என்ன நடந்தது?
சர்ச்சை ஒருபக்கமெனில் படக்குழு கேட்ட விலையும் அதிகமாக இருந்ததால் வெளியீட்டுக்கு முன் ஒப்பந்தம் போடப்படவில்லையாம்.அதனால், வெளியீட்டுக்குப் பின் படத்தைக் கொடுக்கிறோம் என்று படக்குழு சொல்லிவிட்டதாம்.படம் நன்றாக ஓடும் நாம் கேட்ட விலை கிடைத்துவிடும் என்பது படக்குழுவின் நம்பிக்கை. ஆனால் எதிர்பார்த்தபடி படம் ஓடவில்லை.
வெளியீட்டுக்கு முன்ப வாங்க ஒப்புதல் கொடுத்திருந்த கலைஞர் தொலைக்காட்சியும் வெளியீட்டுக்குப் பின் இப்படத்தை வாங்க முன்வரவில்லையாம்.படத்தின் கருத்து சம்பந்தமான சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்பதால் அவர்கள் இந்த முடிவை எடுத்துவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.
அதன்பின்,படக்குழு சன் தொலைக்காட்சியை அணுகியதாகச் சொல்லப்படுகிறது.சந்தானத்தின் படங்களை விடாமல் பற்றிக் கொள்ளும் சன் தொலைக்காட்சியும் இந்தப்படத்தை நிராகரித்துவிட்டதாம்.
இதனால், கலைஞர் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி தவிர்த்து மற்ற நிறுவனங்களை அணுகிக் கொண்டிருக்கிறதாம் படக்குழு.ஆனால் யாருமே படத்தை வாங்க முன் வரவில்லை என்றும் அப்படியே வாங்குவதாக இருந்தாலும் மிகக்குறைவான விலை சொல்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
இதனால் இப்போது வரை இப்படம் விற்பனையாகாமல் இருக்கிறது. இந்நிலையில் அமேசான் இணையதளத்திலும் இப்படம் ஒளிபரப்பாகத் தொடங்கிவிட்டது.இதனால் இனி தொலைக்காட்சி உரிமை விற்பனை கஷ்டம் என்கிறார்கள்.











