மோகன்ராஜா இயக்கத்தில் நடிக்கிறார் சல்மான்கான் – என்ன வேடம் தெரியுமா?
மோகன்லால் மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மலையாளப்படம் லூசிபர். மிகவும் பரபரப்பான வெற்றியை அடைந்த அந்தப்படத்தை இப்போது தெலுங்கில் மொழிமாற்றம் செய்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
காட்ஃபாதர் எனப்பெயரிடப்பட்டுள்ள அந்தப்படத்தில் மோகன்லால் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். மஞ்சுவாரியர் வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார். மோகன்ராஜா இயக்குகிறார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விட்டுவிட்டு நடந்துவருகிறது.
இப்போது இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறதாம். அதற்குக் காரணம் படத்தில் இந்திநடிகர் சல்மான்கான் நடிப்பதுதான் என்கிறாராம்.
லூசிபர் படத்தில் மோகன்லாலின் நண்பராக ஒரு முக்கிய வேடத்தில் பிரித்விராஜ் நடித்திருந்தார். அந்த வேடத்தைத் தெலுங்கில் நடிக்கிறார் சல்மான்கான்.
சல்மான்கான் நடித்தால் இந்தப்படம் தெலுங்கு மட்டுமின்றி இந்தியிலும் பெரிய வரவேற்புப் பெறும் என்று நம்பி அவரைத் துரத்திப் பிடித்து நடிக்கச் சம்மதிக்க வைத்திருக்கிறார்கள்.
கடந்த சில நாட்களாக சல்மான்கான் அந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார். இதனால் இயக்குநர் மோகன்ராஜா உள்ளிட்ட படக்குழு மிகவும் உற்சாகமாக வேலை செய்துகொண்டிருக்கிறதாம்.











