12 ஆண்டுகளுக்குப் பிறகு படம் இயக்கும் சசிகுமார் – வியப்பூட்டும் நடிகர்கள் மற்றும் உதவியாளர்கள்
இயக்குநர் சசிகுமாரை நடிகராகத்தான் பல பேருக்குத் தெரியும். அவர் இப்போதும் நிறையப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.இரண்டே படங்களை இயக்கியுள்ளார். அவர் படம் இயக்கி பனிரெண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.
2010 டிசம்பரில் வெளியான ஈசன் படத்துக்குப் பிறகு முழுநேர நடிகராகிவிட்டார்.
பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாண்டு அவர் மீண்டும் இயக்குநராகிறார்.
தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட கதை குற்றப்பரம்பரை. இக்கதையை பாரதிராஜா, பாலா ஆகியோர் படமாக்கப் போவதாகச் சொன்னார்கள். அதனால் பரபரப்பும் சர்ச்சையும் ஏற்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.
இப்போது குற்றப்பரம்பரை கதையை இணையத் தொடராக எடுக்கவிருக்கிறார்கள். அதைத் தயாரிப்பவர் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். அதை இயக்குபவர் சசிகுமார்.
இத்தொடரில் சத்யராஜ்,தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, இந்தி நடிகர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பெரிய நடிகர் பட்டாளம் களமிறங்குகிறதாம்.
நடிகர் பட்டாளத்தை விட ஆச்சரியம் தரும் செய்தி என்னவென்றால்? இத்தொடரை இயக்கும் இயக்குநர் சசிகுமாருக்கு உதவி இயக்குநர்களாக வேலை செய்பவர்கள் பற்றிய விவரம்தான்.
சசிகுமாரை வைத்து சுந்தரபாண்டியன் படம் இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன், அவரை வைத்து பலேவெள்ளையத்தேவா படம் இயக்கிய சோலைபிரகாஷ், அவரை வைத்துப் படம் இயக்கவிருக்கிற விருமாண்டி (கபெரணசிங்கம் பட இயக்குநர்)ஆகியோர்தாம் உதவி இயக்குநர்களாக வேலை செய்யவிருக்கிறார்களாம்.
மே இறுதி அல்லது ஜூன் முதல்வாரத்தில் இத்தொடரின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம்.
இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.











