விமர்சனம்

ஜீனியஸ் – திரைப்பட விமர்சனம்

பொழுதுபோக்கு வணிகம் ஆகியனவற்றைத் தாண்டி அதன்மூலம் வெகுமக்களுக்கு தமக்குத் தெரிந்த நல்லனவற்றைச் சொல்லிவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் இயக்குநர் சுசீந்திரன் எடுத்திருக்கும் படம்தான் ஜீனியஸ்.

காலை எழுந்தவுடன் படிப்பு என்பது மாறி காலை எழுந்தவுடன் அவசர அவசரமாகப் பள்ளிக்குக் கிளம்பிப் போவதுதான் இன்றைய நிலை. மாலை முழுவதும் விளையாட்டு என்பது சுத்தமாக மாறி மாலையில் படிப்பு என்றாகிவிட்டது.

அதோடு படிப்பு மட்டுமே நம்மை முன்னேற்றும் என்கிற கருத்தை உள்வாங்கிக்கொண்ட பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தம் குழந்தைகளுக்கு நன்மை செய்வதாய் நினைத்துச் செய்யும் தீமைகளைச் சுட்டிக்காட்டுகிறார் சுசீந்திரன்.

நாயகன் ரோஷன், கொடுத்த வேடத்துக்குப் பொருத்தமாக நடிக்க முயன்றிருக்கிறார். மன அழுத்தம் குறைக்க தியானம் செய்யப்போகுமிடத்தில் அவர் சொல்லும் கருத்து உடனே சிரிக்க வைக்கிறது. பின்பும் சிந்திக்கவும் வைக்கிறது.

நாயகி பிரியாலால். அழகான புதுவரவு. மிக அழுத்தமான ஆழமான வேடம் அவருக்கு. அதைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். தாய்மை உணர்வோடு அவர் நாயகனை அணுகும் விதம் சிறப்பு.

ஆடுகளம் நரேன் மீராகிருஷ்ணன் இணையர், தற்காலப் பெற்றோர்களைப் பிரதிபலிக்கிற வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

நாயகி பிரியாலாலிடம் பேசிவிட்டு வேகமாக நடக்கிற நடையில் தன் திறமையை வெளிப்படுத்தி கவர்கிறார் ஆடுகளம் நரேன்.

மீராகிருஷ்ணன், கணவனைக் குற்றம் சொல்லிப் பேசும் வசனங்கள் அர்த்தமுள்ளவை ஆழமானவை. அந்த உணர்வை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார் மீராகிருஷ்ணன். வசனங்களை அமுதேஸ்வர் எழுதியிருக்கிறார்.

வ.ஐ.ச.ஜெயபாலனுக்கு அருமையான வேடம். அதற்கு மிகப்பொருத்தமாக அவர் நடித்திருக்கிறார்.

சிங்கம்புலி சிரிக்கவைக்கிறார். சிங்கமுத்து, இர்ரோடுமகேஷ், பாலாஜி ஆகியோர் ஏமாற்றம் தருகிறார்கள்.

யுவனின் இசையில், சிலு சிலு காற்றும் அதன் காட்சிகளும் குளுமை. நீங்களும் ஊரும் பாடல் உட்பட எல்லாப் பாடல்களும் நன்றாக அமைந்திருக்கின்றன.

ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவில், கிராமத்துக்காட்சிகளும் பள்ளிக்கூடக் காட்சிகளும் கவனிக்க வைக்கின்றன.

நுட்பமான திரைக்கதை மற்றும் காட்சிகள் மூலம் தற்காலப் பெற்றோர் செய்யும் தவறுகளைச் சுட்டியிருக்கும் இயக்குநர் சுசீந்திரன்,

நிறையச் செய்திகளைச் சொல்லவேண்டும் என்கிற ஆர்வத்தில் வேகவேகமாகச் சொல்லிச் செல்கிறார்.
பார்த்து உணர வேண்டியனவற்றைக்கூட சொல்லிச் செல்கிறார்.

ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பான ஆசிரியர் என்று பெயரெடுத்தவர்களும் கட்டாயம் பார்க்கவேண்டிய படம்.

Related Posts