பிக்பாஸ் 8 – தொடக்கமே குழப்பம்

விஜய் தொலைக்காட்சியின் பலம் பொருந்திய நிகழ்ச்சியாகத் திகழ்வது ஆண்டுதோறும் நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி.ஏழாண்டுகள் நடந்திருக்கும் அந்த நிகழ்ச்சியின் எட்டாம்பாகம் இவ்வாண்டு நடக்கவிருக்கிறது.
அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.எட்டாம் பாக நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் யார்?யார்? என்கிற தேடல் தொடங்கிவிட்டது.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தயாரிக்கும் நிறுவனமும் விஜய் தொலைக்காட்சியும் அதிர்ச்சி அடையும் வகையில் எட்டாம் பாகத்தைத் தொகுத்து வழங்க என்னால் முடியாது என்று சொல்லிவிட்டாராம் கமல்.
அதற்காக அவர் சொன்ன காரணம்,பிரபாஸ் நடிக்கும் கல்கி பாகம் இரண்டு, மணிரத்னம் இயக்கும் தக்லைஃப்,அன்பறிவ் இயக்கும் புதிய படம் ஆகியனவற்றின் படப்பிடிப்புகளுக்கு அடுத்தடுத்து தேதி கொடுத்துவிட்டேன் அதனால் இம்முறை என்னால் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவியலாது என்று சொல்லிவிட்டாராம்.
இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையாம் விஜய் தொலைக்காட்சி நிர்வாகம்.ஏனெனில்,விஜய் தொலைக்காட்சியின் வியாபாரக் குழுவினர்,பிக்பாஸ் 8 நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குகிறார் என்று சொல்லி பல விளம்பரதாரர்களிடம் ஒப்பந்தமே போட்டுவிட்டதாம்.வழக்கமாக இருக்கும் கட்டணத்தை விட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான விளம்பரக் கட்டணம் அதிகம்.ஆனாலும் அதில் விளம்பரம் செய்ய விளம்பரதாரர்கள் முன்வருவார்கள்.அதற்கு கமல் தொகுத்து வழங்குவதும் ஒரு காரணம்.
இவ்வாண்டும் அவரே தொகுத்து வழங்குவார் என்று நம்பி விளம்பரதாரர்கள் முன்வந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் இவர் தொகுத்து வழங்கவியலாது என்று சொன்னால் அதிர்ச்சியாகத் தானே இருக்கும்.
அந்த அதிர்ச்சியோடே அவரைச் சந்தித்துப் பேச நேரம் கேட்டிருக்கிறது விஜய் தொலைக்காட்சி.அண்மையில் விஜய் தொ.கா நிர்வாகிகளைச் சந்தித்த கமல், தன்னுடைய திரைப்பட வேலைகளைப் பட்டியலிட்டு மீண்டும் உறுதியாக மறுத்திருக்கிறார்.இதனால் வேதனையுடன் திரும்பி வந்திருக்கிறது விஜய் தொ.கா நிர்வாகம்.
ஒருபக்கம் கமல் இல்லையென்றால் வேறு யார்? என்று தேடலைத் தொடங்கியிருக்கிறார்கள். அதேநேரம், இம்முறை எப்படியாவது அவரையே சம்மதிக்க வைத்துவிடலாம் என்றும் யோசிக்கிறார்களாம்.
கமல் உறுதியாக மறுத்த பின்னும் அவர்கள் இப்படி நினைக்கக் காரணம் இருக்கிறதாம்.
முன்பொருமுறை இப்படி மறுத்திருக்கிறார் கமல். அப்போது அவர் முன்பு வாங்கிய சம்பளத்தை விட அதிகச் சம்பளம் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதன்பின் அவர் ஒப்புக்கொண்டார் என்கிறார்கள்.
அப்போது போடப்பட்ட ஒப்பந்தத்தின் படியே இவ்வாண்டும் சம்பளம் வழங்கப்படும் என்கிற நிலை.ஆனால் இப்போது அதைவிட அதிகச் சம்பளத்தை எதிர்பார்க்கிறார் கமல்.அதை நேரடியாகச் சொல்லாமல் இப்படிச் சொல்கிறார் என எண்ணுகிறார்கள்.
இப்போது அவருக்கு அதிகச் சம்பளம் கொடுப்பது தொடர்பாக தொ.கா நிர்வாகம் பிக்பாஸ் தயாரிப்பு நிறுவனம் ஆகியன பேசிக் கொண்டிருக்கின்றனவாம்.
இவர்கள் ஒரு முடிவெடுத்து அதை கமலிடம் சொன்னால் அவர் ஒப்புக்கொள்வார் என்கிறார்கள்.
என்ன நடக்கப் போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.