விஜய் அப்பாவின் பெருந்தன்மை
1978 ஆம் ஆண்டு திரையுலகத்துக்கு வந்த விஜயகாந்துக்கு இது நாற்பதாவது ஆண்டு. இதை அவருடைய கட்சி விழா எடுத்து கொண்டாடியது.
அவ்விழாவில் நிறைய திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
அவ்விழாவில் பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்
நட்பு, அன்பு, மரியாதை, நன்றி, மனிதம் ஆகிய எல்லாவற்றிற்கும் அர்த்தம் விஜயகாந்த்தான். என் மகனை நடிகனாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, நாளைய தீர்ப்பு படம் எடுத்தேன்.
அப்படம் சரியாகப் போகவில்லை.அதனால் அவரை எப்படியாவது நடிகனாக்கிவிட வேண்டும், விஜயகாந்த்தோட சேர்ந்து நடித்தால் நடிகனா நிலைபெறுவார் என்று நினைத்தோம்.
அதற்காக, விஜயகாந்துக்கு போன் பண்ணி ஐந்து நிமிடத்தில் வீட்டுக்கு வருகிறேன் என்று சொன்னேன். ஆனால், சொல்லி இரண்டு நிமிடங்களில் அவர் என் வீட்டுக்கு வந்துவிட்டார்.
என் மகன் நடிக்க ஆசைப்பட்டான்.நாளைய தீர்ப்பு எடுத்தோம், அது சரியாகப் போகவில்லை. உங்களுடன் ஒரு படம் சேர்ந்து அவன் நடிக்கவேண்டும் என்று நான் சொன்னவுடனே, ‘எப்போ எங்கேனு சொல்லுங்க கண்டிப்பா பண்ணலாம்’னு சொன்னார்.
அவர் ஒப்புக்கொணடவுடன், சம்பளம் எவ்வளவு என்று கேட்டேன். அதற்கு அவர், அதெல்லாம் ஒண்ணும் வேணாம். தம்பி நடிகனாகட்டும் அப்புறம் பார்த்துக்கலாம் என்று சொல்லிவிட்டார்.
அதுதான் செந்தூரபாண்டி. அந்தப் படம் ஹிட்டாச்சு. அதற்குப் பிறகு, என் மகன் வாழ்க்கை உயரப் போக ஆரம்பித்துவிட்டது.
விஜய்யின் இன்றைய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போட்டதில் விஜயகாந்த்துக்கு பெரிய பங்கு இருக்கிறது என்று பேசினார்.
இன்றைக்கு தமிழ்த்திரையுலகில் உச்சநடிகராக இருக்கிறார் விஜய்.அவருடைய வளர்ச்சிக்கு விஜயகாந்த் உதவினார் என்பதை இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகும் வெளிப்படையாக ஒப்புக்கொண்ட விஜய்யின் அப்பாவை எல்லோரும் பாராட்டுகிறார்கள்.











