சிவகார்த்திகேயன் சுதாகொங்கரா படத்துக்கு நான்கு தயாரிப்பாளர்கள் – யார்?யார்?
சிவகார்த்திகேயன் இப்போது கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அமரன் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றில் அமரன் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கிறது என்கிறார்கள்.
இவற்றிற்கு அடுத்து பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் டான் பட இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.
அந்தப்படத்துக்கு அடுத்து சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.அப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் முதல்வாரத்தில் தொடங்கும் என்றும் சொல்லப்பட்டது.
இப்போது, டான் இயக்குநரின் படத்துக்கு அடுத்து சுதாகொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார் என்கிறார்கள்.
சுதாகொங்கரா இயக்கும் படத்தை மாவீரன் படத்தைத் தயாரித்த சாந்தி டாக்கீஸ் அருண்விஷ்வா தயாரிக்கவிருக்கிறார்,அப்படத்தை முதல்பிரதி அடிப்படையில் மீனாட்சி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த மீனாட்சி சினிமாஸ் நிறுவனம் இயக்குநர் சுதாகொங்கராவினுடையது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் இந்தப்படத்தின் தயாரிப்புச் செலவு மிக அதிகம் என்பதால் இப்படத்துக்குள் இன்னொரு தயாரிப்பாளராக உதயநிதியின் உறவினர் ரத்தீஷ் வந்திருக்கிறார் என்று சொல்லப்பட்டது.ஆனால் அவர் படம் தயாரிக்க நிதி கொடுக்கிறார் அதனால் தயாரிப்பாளர்கள் பெயர் வரிசையில் அவர் பெயர் இடம்பெறாது என்போரும் உண்டு.
இப்போதே மூன்று தயாரிப்பாளர்கள் பெயர் இருக்கும் நேரத்தில் நான்காவதாக இந்தப் படத்துக்குள் இன்னொரு நிறுவனத்தையும் கொண்டு வருவதற்குப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
பெங்களூரை மையமாகக் கொண்டு இயங்கும் கேவிஎன் நிறுவனம் அடுத்து எச்.வினோத் இயக்கும் விஜய் படத்தைத் தயாரிக்கவிருக்கிறது.
அந்த நிறுவனத்தையும் இந்தப்படத்தின் தயாரிப்பில் இணைத்துக் கொள்ளலாம் என்று இப்படம் சம்பந்தப்பட்ட எல்லோரும் கூட்டாக முடிவெடுத்து அந்நிறுவனத்தினரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்களாம்.
அவர்கள் தயாரிப்பில் இணைந்தாலும் சரி இணையாவிட்டாலும் சரி படத்தைத் தொடங்கிவிடுவது என்று முடிவு செய்திருக்கிறார்கள்.ரத்தீஷ் இருக்கும் தைரியத்தில் இந்த முடிவுக்கு வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதன்படி டிசம்பர் மாதம் இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.சுமார் பதினைந்து நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்படுகிறது என்றும் அதன்பின் சிறிது இடைவெளிக்குப் பின் மீண்டும் படப்பிடிப்பு நடக்கும் என்பது இப்போதைய நிலை.