வடசென்னையில் இந்தியன் 2 படப்பிடிப்பு

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன்,காஜல் அகர்வால்,சித்தார்த்,விவேக்,நெடுமுடிவேணு உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் இந்தியன் 2.
லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் இந்தியன் 2. 2017 ஆம் ஆண்டே இந்தப்படத்துக்கான முன்தயாரிப்பு வேலைகள் தொடங்கிவிட்டன.
பல ஆண்டுகள், பல இடையூறுகள், ஏராளமான சிக்கல்கள் ஆகியனவற்றைச் சந்தித்து இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது இந்தியன் 2.
இடையூறுகள் மற்றும் சிக்கல்கள் விளைவாக நன்மை ஒன்றும் நடந்திருக்கிறது. ஆம், இந்தியன் 2 என்று தொடங்கப்பட்ட இந்தப்படம் ஒரேகல்லில் இரண்டு மாங்காய்கள் என்பதுபோல இரண்டு படங்களாகிவிட்டன. இந்தியன் 2, இந்தியன் 3 ஆக அவை வெளிவரவரவிருக்கின்றன.
இப்போது இப்படத்தயாரிப்பில் ரெட்ஜெயண்ட் நிறுவனமும் கைகோர்த்திருக்கிறது.
இரண்டு படங்கள் என ஆகிவிட்டதால் இன்னும் பல நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறதாம்.
அப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல்காட்சிக்கான படப்பிடிப்பு இன்று வடசென்னையில் தொடங்குகிறது.
வழக்கமாக கோட்டூர்புரம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் படப்பிடிப்பு நடத்துவார் ஷங்கர். அது இப்போது இல்லையென்பதால் வடசென்னைக்குப் போய்விட்டார்.
இன்று தொடங்கவிருக்கும் படப்பிடிப்புக்காகப் பலநாட்கள் முன்பே ஒட்டுமொத்த வீடுகளுக்கும் வர்ணம் பூசி சுவர்களில் இந்தியன் தாத்தா படத்தை வரையும் வேலைகள் தொடங்கி நடந்து கொண்டிருக்கின்றன.
இந்தியன் தாத்தாவின் புகழ்பாடும் பாடல் என்பதால் இந்த வேலைகள் நடக்கின்றன என்று சொல்கிறார்கள்.
இங்கு சுமார் ஒரு வாரம் படப்பிடிப்பு நடக்குமென்று சொல்லப்படுகிறது. இதோடு மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடுமா? என்றால் இல்லை. இன்னும் சுமார் பதினைந்து நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கும் என்று சொல்கிறார்கள்.
இதனால் இவ்வாண்டு ஏப்ரலில் இப்படம் வெளியாகும் என்பதிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது.
பாராளுமன்றத் தேர்தல் அதன் முடிவுகள் ஆகியன பற்றித் தெரிந்து கொண்டு அதன்பின் படத்தின் வெளியீட்டுத் தேதியை முடிவு செய்துகொள்ளலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம்.