குஷ்பு சிம்ரன் குத்தாட்டம் பேயாக தமன்னா – அரண்மனை 4 அலப்பறை
2014 ஆம் ஆண்டு வெளியாகி, குடும்பங்களைக் குதூகலப்படுத்திய பேய்ப் படம் அரண்மனை.சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு,2016 ஆம் ஆண்டு அரண்மனை 2 படமும் 2021 ஆம் ஆண்டு அரண்மனை 3 ஆகிய படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன.
முதல் மூன்று பாகங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, தற்போது நான்காம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது.
பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் (Benzz Media PVT LTD) சார்பில் ஏ.சி.எஸ்.அருண்குமார் மற்றும் அவ்னி சினி மேக்ஸ் (Avni Cinemax (P) Ltd) சார்பில் குஷ்பு சுந்தர் ஆகியோர் தயாரித்துள்ள அரண்மனை 4 படத்தை இயக்கி நடித்துள்ளார் சுந்தர்.சி.
இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி,விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கே ஜி எஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், தீரஜ் விஷ்ணு ரத்தினம், எஸ்.நமோ நாராயணன், மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு எழுத்து இயக்கம் – சுந்தர் சி,வசனம் – வேங்கட் ராகவன்,இசை – ஹிப்ஹாப் தமிழா,ஒளிப்பதிவு – இசக்கி கிருஷ்ணசாமி,படத்தொகுப்பு – ஃபென்னி ஆலிவர்,கலை இயக்கம் – பொன்ராஜ்,சண்டைப்பயிற்சி – ராஜசேகர்.கே
இப்படம் இவ்வாண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கலையொட்டி வெளியாகும் என்று சொல்லியிருந்தார்கள்.அப்போது வெளியாகவில்லை.
இப்போது இஸ்லாமியப் பெருநாளான ரமலானையொட்டி ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வெளியாகவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அரண்மனை முதல் பாகத்தில் வினய், அரண்மனை 2 படத்தில் சித்தார்த், அரண்மனை 3 படத்தில் ஆர்யா என வேறு கதாநாயகர்கள் இருந்தார்கள்.ஆனால் அரண்மனை 4 படத்தில் சுந்தர்.சி மட்டுமே நாயகனாகக் களமிறங்கியிருக்கிறாராம்.
இப்படத்தில் பேயாக தமன்னா நடித்திருக்கிறாராம்.இப்படத்தின் இறுதியில் வரும் துள்ளல் பாடலில் இம்முறை குஷ்பு, சிம்ரன் ஆகிய இருவரும் நடனமாடியிருக்கிறார்களாம்.
இவ்வளவு விசயங்களை உள்ளே வைத்து நம்பி வருகிற இரசிகர்களை மனநிறைவோடு அனுப்ப வேண்டும் என்று மெனக்கெட்டிருக்கிறாராம் சுந்தர்.சி.
அதனால்தான், நாடாளுமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி பல படங்கள் பின்வாங்கிய நிலையில் ஏப்ரல் 11 அன்று வெளியீட்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறதாம் அரண்மனை 4.
இந்தப்படத்தை தமிழ்நாடு திரையரங்குகளில் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது என்றே சொல்கிறார்கள்.