தக்லைஃப் படத்தில் ஜெயம்ரவிக்குப் பதிலாக அருண்விஜய் அல்லது நிவின்பாலி?

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துக் கொண்டிருக்கும் படம் தக் லைஃப்.இப்படத்தில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி சில நாட்கள் நடந்தது.
இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு செர்பியாவில் நடக்கும் என்றார்கள்.ஆனால் கமல்ஹாசன் தேதிகள் கிடைக்காததால் தொழில்நுட்பக்குழுவினர் மட்டும் செர்பியா சென்று வெளிப்புறக்காட்சிகளைப் படம்பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
அடுத்தகட்டப் படப்பிடிப்பு நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் படத்தில் நடிப்பதாக இருந்த துல்கர்சல்மான் மற்றும் ஜெயம்ரவி ஆகியோர் படத்திலிருந்து விலகியிருக்கிறார்கள்.இருவரிடமும் வாங்கிய தேதிகளைப் பயன்படுத்தாமல் மறுபடி மறுபடி மாற்றி மாற்றித் தேதிகள் கேட்டிருக்கிறார்கள்.அவ்வாறு கேட்ட தேதிகளில் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட பட வேலைகள் இருப்பதால் தேதி தர முடியவில்லை என்பதால் இருவரும் படத்திலிருந்து விலகியிருக்கிறார்கள்.
இதனால் அவர்களுக்கு மாற்றாக வேறு நடிகர்களை ஒப்பந்தம் செய்யும் வேலைகள் நடக்கின்றன.
துல்கர்சல்மானுக்குப் பதிலாக முதலிலேயே நடிப்பதாகச் சொல்லப்பட்ட சிம்பு மறுபடியும் வந்திருக்கிறார்.அவரிடம் மீண்டும் அணுகியபோது அவரும் நடிக்க ஒப்புக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது. அவரை வைத்து புகைப்படங்கள் எடுத்துப் பார்த்திருக்கிறார்கள். அனைவருக்கும் திருப்தி.
அடுத்து ஜெயம்ரவிக்குப் பதிலாக யாரை நடிக்க வைப்பது? என்கிற பேச்சின்போது அருண்விஜய் மற்றும் நிவின்பாலி ஆகியோருடைய பெயர்கள் சொல்லப்படுகின்றன.
இருவரிடமும் பேச்சுவார்த்தை நடக்கிறது.யாருடைய தேதிகள் சரியாக அமைகின்றனவோ அவரை நடிக்க வைக்கலாம் என்பது படக்குழுவின் முடிவு என்கிறார்கள்.
இதுகுறித்து நிவின்பாலி தரப்பிடம் விசாரித்தால், எங்களுக்கு அப்படி ஒரு அழைப்பே வரவில்லை அப்படியிருக்கும்போது அவர் நடிக்க ஒப்புக்கொண்டாரா? என்கிற கேள்விக்கே இடமில்லை என்று சொல்கிறார்கள்.
அதேபோல, அருண்விஜய் தரப்பில் ஜெயம்ரவிக்குப் பதிலாக தக்லைஃப் படத்தில் அருண்விஜய் நடிக்கிறாரா? என்று விசாரித்தால் அவர்களும் மறுக்கிறார்கள்.
தக்லைஃப் படக்குழுவிடமிருந்து அருண்விஜய் சாருக்கு எந்த அழைப்பும் வரவில்லை.சார் இப்போது பாலா இயக்கும் வணங்கான் படப்பிடிப்பில் இருக்கிறார்.இதைத் தொடர்ந்து திருக்குமரன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் என்கிறார் அருண்விஜய்யின் மேலாளர் சதீஷ்.