சினிமா

ஆதித்ய வர்மா – விமர்சனம்

விஜய்தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆதித்ய வர்மா. சொல்லப்போனால், தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி, இந்தியில் கபீர் சிங் வரிசையில் மூன்றாவது வெர்ஷனாக வெளியாகியிருக்கிறது ஆதித்ய வர்மா.

கோவக்கார நாயகனுக்கும் சாந்தமான நாயகிக்கும் இடையிலான பார்த்தவுடன் காதல், மோதல், பிரிவு, மீண்டும் சேர்தல் என்கிற நவயுக தேவதாஸ் கதை தான் இந்த ஆதித்ய வர்மா.

மங்களூர் தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் த்ருவ் விக்ரம். கல்லூரி டாப்பராக இருக்கும் த்ருவ், கட்டுப்படுத்த முடியாத கோவத்தினால் கல்லூரியை விட்டு வெளியேற நேர்கிறது. அப்போது ஒற்றைச் சாரலாய் நாயகி பனிட்டா சந்துவை சந்திக்கிறார். பார்த்ததும் காதலில் விழுகிறார் த்ருவ். இருவரும் காதலிக்கிறார்கள். லிவிங் டூ கெதராக வாழ்கிறார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் இருவரின் காதல் வீட்டினருக்கு தெரிய வருகிறது. இருவரும் பிரியவேண்டிய சூழல். பிறகு, என்னவானது, இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா என்பதே கதை.

Adithya Varma

தமிழ் திரையுலகில் நாயகன் த்ருவ்க்கு நல்ல அறிமுகத்தை இந்தப் படம் கொடுத்திருக்கிறது. கோவம், சண்டை, அழுகை, காதல் என நடிப்பால் பல உணர்வுகளைக் கடத்திவிடுகிறார். கரகர குரலில் பேசும் இடங்களில் தந்தை விக்ரமை நினைவு படுத்துகிறார். நடிப்பால் நிச்சயம் அரை சதம் அடித்திருக்கிறார் ‘சின்ன விக்ரம்’. ஆனால், அர்ஜூன் ரெட்டியில் விஜய் தேவரகொண்டா தந்த நடிப்பின் பிரதிபலிப்பாக மட்டுமே இறுதியில் தெரிகிறது.

காது சிவக்க கோவப்படுவது, மீராவை நினைத்து உடைந்து அழுவது, அந்த நீதிமன்ற காட்சி, இறுதியாக மீராவை சந்திக்கும் இடம் என படம் முழுக்க ஆதியாக நினைகிறார் த்ருவ்.

ஒரிஜினல் அர்ஜூன் ரெட்டியை ஒப்பிடும்போது, முழுமையான ஒரு ரீமேக் தான். தெலுங்கில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும். ஆனால் தமிழில் பாடல்கள் பெரிதாக வலு சேர்க்கவில்லை. பெரிதாக மேக்கப் இல்லாமல், தெலுங்கில் ஷாலினி பாண்டே கவர்ந்திருப்பார். அவரின் க்யூட்னஸ் தமிழில் நடித்த பனிட்டா பெரிதாக வரவில்லை. பனிட்டாவின் நடிப்பும் கொஞ்சம் மிஸ்ஸிங்.

ஒரிஜினலின் ஜீவன் சிதையாமல் கச்சிதமாக பிரதி எடுத்திருக்கிறார் இயக்குநர் கிரிசாயா. ஒளிப்பதிவாக, படத்தொகுப்பாக, இசையாக என படத்துக்கான முழு உழைப்பும் கச்சிதமாக இணைந்திருக்கிறது. உயர்தர குவாலிட்டியை படத்துக்கு கொடுக்கிறது.

த்ருவ்வின் தந்தையாக ராஜா, அம்மாவாக தீபா ராமானுஜம், பாட்டியாக லீலா சாம்ஸன், நடிகையாகவே வரும் ப்ரியா ஆனந்த் , நண்பனாக வரும் அன்பு என அனைவருமே நல்ல நடிப்போடு வந்துபோகிறார்கள்.

Adithya Varma

காதல் தோல்வி என்கிற ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு பார்பவரையெல்லாம் படுக்க அழைப்பது, குடித்துவிட்டு மருத்துவம் பார்ப்பது, வேலைக்காரப் பெண்ணை ஓடஓட துரத்துவது என ஆண் திமிருடன் அராஜம் செய்வதெல்லாம் தேவையா? பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயர் வேண்டாம் என ஒரு காட்சியில் நாயகன் சொல்கிறார். பிறகு, ஏன் படத்துக்கு ஆதித்ய வர்மா?

மேல்தட்டு வாழ்க்கையை மையமாக கொண்டு திரைக்கதை நகர்வது பெரிதாக எல்லா ரசிகர்களையும் கவருமா என்பதும் தெரியவில்லை. யாரை குறிவைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டதோ, அவர்களுக்கு எளிதில் ரீச் ஆகலாம். மத்தபடி, அர்ஜூன் ரெட்டியில் கச்சிதமான ரீமேக் ஆதித்யவர்மா.

Related Posts