ஆற்றல் – திரைப்பட விமர்சனம்
அறிவியல் தொழில்நுட்பத் துணையுடன் கொலை கொள்ளை என இஷ்டத்துக்குச் செய்து திரியும் ஒரு கூட்டத்தை சாமானிய இளைஞனொருவன் ஆற்றலுடன் எதிர்கொள்வதுதான் ஆற்றல் திரைப்படம்.
புதியகண்டுபிடிப்புகளில் ஆர்வமுடையவராக இருக்கிறார் நாயகன் விதார்த். ஆள் இல்லாமல் இயங்கும் மகிழுந்தை உருவாக்குவது அவருடைய கனவு. அந்தக்கனவை நனவாக்க உறுதுணையாக இருக்கும் அப்பா திடீரென மரணமடைகிறார். அவர் எப்படி மரணித்தார்? விதார்த்தின் கனவு நிறைவேறியதா? அதன்பலன் என்ன? என்பனவற்றைச் சொல்லும் படம் ஆற்றல்.
நடுத்தரக்குடும்பத்தைச் சேர்ந்த அன்பான அம்மா அப்பாவுக்கு நல்ல பிள்ளையான விதார்த், அதற்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார். காதல்காட்சிகளில் வெட்கப்படுகிறார். சண்டைக்காட்சிகளில் வேகம் காட்டுகிறார்.
நாயகி ஷிரிதா ராவ் அழகான புதுவரவு. அளவான கவர்ச்சி காட்டி சரியான நடிப்பையும் கொடுத்திருக்கிறார். ஜூஸ் காட்சிகள் இளமைத்துள்ளல்.
நடுத்தரக்குடும்பத்தின் தலைவராக தன் சக்திக்கு மீறிய தொகையெனினும் மகனுக்காக அதைச் சாத்தியப்படுத்தும் வேடத்தில் நடித்து வரவேற்புப் பெறுகிறார் சார்லி.
வில்லனாக நடித்திருக்கும் வம்சிகிருஷ்ணாவின் வேடம் ஆபத்தானதாக அமைந்திருக்கிறது. அதற்கேற்ப நடித்து பலம் சேர்க்கிறார்.
கொளஞ்சிகுமாரின் ஒளிப்பதிவில் பறவைப்பார்வைக் காட்சிகள் அதிகம். அவை கதையோட்டத்துக்குப் பயன்பட்டிருக்கின்றன.
அஸ்வின்ஹேமந்த்தின் இசை உறுத்தாமல் உடன்படுகிறது.
விஜய்வேலுக்குட்டியின் படத்தொகுப்பில் படம் வேகமாக நகர்கிறது.
விக்கியின் சண்டைப்பயிற்சியில் துள்ளுந்துத் துரத்தல்கள் மற்றும் இறுதிச்சண்டை நன்று.
சின்ன கதையை வைத்துக் கொண்டு அதைச் சீரிய முறையில் கொடுக்க மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர் கே.எல்.கண்ணன். வில்லன்கள் கொள்ளைக்குப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் ஆபத்தானது. அதை நாட்டுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.











