லாக்கர் – திரைப்பட விமர்சனம்
திருட்டு வேலைகள் செய்யும் கதாநாயகன், காதலில் விழுந்ததும்,காதலிக்குப் பிடிக்கவில்லை என்பதால் திருட்டுத் தொழிலை விட்டுவிடுகிறார். ஆனால், அதே காதலிக்காக மீண்டும் அவ்வேலையில் ஈடுபடுகிறார். அது ஏன்? எதற்காக? என்பதையெல்லாம் சொல்லும் படம்தான் லாக்கர்.
நாயகனாக நடித்திருக்கும் விக்னேஷ் சண்முகத்துக்கு இது முதல்படம். ஆனால் அது தெரியாத வண்ணம் நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் மட்டுமின்றி காதல் காட்சிகளிலும் தேர்ச்சிமதிப்பெண் பெறுகிறார்.
புதுமுக நாயகி நிரஞ்சனா அசோகனும் குறைவில்லை.ஏனோதானோவென வந்துபோகும் வேடமாக இல்லாமல் முதல்படத்திலேயே கதாநாயகிக்குக் கூடுதல் முக்கியத்துவம் உள்ள கதை அமைந்திருக்கிறது.அவரும் அதைச் சரியாகப் பயன்படுத்தி நற்பெயர் பெறுகிறார்.
வில்லனாக நடித்திருக்கும் நிவாஸ் ஆதித்தன், முக்கியபாத்திரத்தில் நடித்திருக்கும் சுப்பிரமணியன் மாதவன்,நாயகனின் நண்பராக வரும் தாஜ்பாபு ஆகியோரும் ஏற்றுக்கொண்ட வேடங்களுக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு செய்திருக்கும் தணிகைதாசன், படம் இயல்பாகவும் இலகுவாகவும் நகரும்படி உழைத்திருக்கிறார்.
வைகுந்த்ஸ்ரீனிவாசனின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை அளவாக அமைந்து ஆசுவாசப்படுத்துகிறது.
படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த் கண பார்த்தி படம் வேகமாக நகரும் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்.
ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன் ஆகிய இரண்டுபேர் படத்தை இயக்கியிருக்கிறார்கள்.
அரசியல்வாதியின் கறுப்புப்பணம், தங்கக்கடத்தல் என்று பெரிய பெரிய விசயங்களைப் படத்தில் வைத்துப் பரபரப்பைக் கூட்ட முயன்றிருக்கிறார்கள். இந்த உலகத்தில் நாம் எடுக்கிற பெரிய ரிஸ்க் எது தெரியுமா?எந்த ரிஸ்க்குமே எடுக்காம இருக்கிறதுதான் என்பது உட்பட படத்தில் வரும் பல வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.
யூகிக்கக்கூடிய திரைக்கதை மட்டுமின்றி இதுதான் நடக்கும் என நினைக்கும் காட்சிகளும் அதிகம் இடம்பெற்றிருக்கின்றன என்றாலும் சலிப்பில்லாமல் படத்தை நகர வைத்திருப்பது பலம்.
– சரவண்