February 12, 2025
செய்திக் குறிப்புகள்

நயன்தாராவின் அன்னபூரணி படக் கதை இதுதான் – இயக்குநர் பேட்டி

முன்னோட்டம் வந்தபோதே ஆச்சாரமான பிராமணக்குடும்பத்தைச் சேர்ந்த பெண் அசைவ உணவு சமைப்பது போன்று காட்டுவதா எனப் பரபரப்பைக் கிளப்பிய படம் அன்னபூரணி.

நயன்தாரா மற்றும் ஜெய் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சஞ்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு செய்ய, ஜி.துரைராஜ் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். அருள் சக்தி முருகன் வசனம் எழுத, பிரசாந்த்.எஸ் கூடுதல் திரைக்கதை அமைத்துள்ளார்.

‘டார்லிங்’ மற்றும் ‘எனக்கு இன்னொரு பெயர் இருக்கு’ படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பின்பு, இயக்குநர் ஷங்கரிடம் ‘எந்திரன் 2.0’ படத்திலும், ‘இந்தியன் 2’ படத்தின் ஆரம்பக் கட்டப் பணிகளில் பணியாற்றியவர் நிலேஷ் கிருஷ்ணா.இவருடைய சொந்த ஊர் நாமக்கல்.

அவர் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராக உயர்ந்துள்ளார். இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

டிசம்பர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது ‘அன்னபூரணி’ படம்.

இந்நிலையில் படம் பற்றி படத்தின் இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா கூறியதாவது…..

இது என் முதல் படம்.இந்தப் படம் உணவு பற்றிய படம் அல்ல. அப்பா – மகள் இடையே இருக்கும் உறவை உணர்வுப்பூர்வமாகச் சொல்வது தான் கதை.ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ஒரு பிராமணக் குடும்பத்துப் பெண் இந்தியாவின் சிறந்த சமையல் கலை நிபுணராக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அவரது இலட்சியத்தில் வெற்றி பெறுவதற்காக அவர் எப்படிப்பட்ட தடைகளைக் கடந்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.
இதில், யாரடி நீ மோகினி படத்தில் பார்த்த நயன்தாராவை மீண்டும் பார்க்கலாம்.

படத்தில் ஜெய் நயன்தாராவின் சிறுவயது நண்பராக நடித்திருக்கிறார். நயன்தாராவுக்குச் சமையல் கலை நிபுணராக வேண்டும் என்பது இலட்சியம் என்றால், ஜெய்க்கு அவரை எப்படியாவது சமையல் கலை நிபுணராகப் பார்க்க வேண்டும் என்பது தான் இலட்சியம். இந்தப் படத்திற்கு அவரை சிபாரிசு செய்தது நயன்தாரா தான். இந்தக் கதையை ஜெய்யிடம் சொன்ன போது, அவர் முழுவதுமாகக் கேட்டுவிட்டு, ஒரு சிறந்த படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம், அதனால் இந்தப் படத்தில் நடிக்கிறேன் என்று சொன்னார். ஜெய் மற்றும் நயன்தாரா இருவருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக வந்திருக்கிறது, ‘ராஜா ராணி’ படத்தில் அவர்களுக்கு இருந்த கெமிஸ்ட்ரியை நினைவுப்படுத்துவது போல் இருக்கும்.

இந்தப் படத்தின் கதையை நான் 2019 ஆம் ஆண்டே எழுத ஆரம்பித்து விட்டேன். ஒரு நாள் என் நண்பருடன் உணவகத்தில் சாப்பிட்ட போது உணவு தொடர்பாக அவருக்கும் அங்கிருந்த சமையல் கலை நிபுணருக்கும் வாக்குவாதம் நடந்தது. அப்போதுதான் சமையல் கலை நிபுணர் என்பதை யாரும் பெரிதாகப் பார்ப்பதில்லை, ஏன் இதை வைத்தே ஒரு கதை எழுதக்கூடாது என்று தோன்றியது?

நான் கதை எழுதும்போது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சிகள் பிரபலமடையவில்லை. அதுமட்டும் அல்ல, இந்த சமையல் கலை பற்றிய பல விசயங்கள் மற்றும் புரிதல் பலருக்குச் சரியாகத் தெரியவில்லை. அதேபோல், இந்தத் துறையில் ஆண்கள் ஆதிக்கம் தான் அதிகம், அதில் ஒரு பெண் சாதிக்க நினைத்தால் எப்படி இருக்கும்? என்று யோசித்துத் தான் இந்தக் கதையை எழுதினேன்.

இப்படி ஒரு கதை எழுத வேண்டும் என்று தோன்றியபோது அதில் நயன்தாரா தான் நடிக்க வேண்டும் என்று நான் முடிவு செய்தேன். அவருக்காகவே இந்தக் கதையை நான் எழுதினேன். கொரோனா காலகட்டத்தின் போது தொலைபேசியில் அவருக்கு இந்தக் கதையைக் கூறினேன். முதல் முறையாக 45 நிமிடங்கள் தொலைபேசியில் கதை கேட்டதுமே அவருக்குப் பிடித்து விட்டது. குறிப்பாக, அவர் நடித்திருக்கும் கதாநாயகியை மையப்படுத்திய படங்கள் அனைத்துமே திகில், த்ரில்லர், ஆக்‌ஷன் ஜானர் படங்களாகவே இருந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர் விரும்பிய நேரத்தில் நான் இந்தக் கதையைச் சொல்லியிருக்கிறேன்.கதை கேட்டதும் அவருக்குப் பிடித்து விட்டது. கதை கேட்ட முதல் நாளில் இருந்து அவர் கதையோடு ஒன்றிவிட்டார்.படத்தில் என்ன சொல்லப்போகிறோம், அதை எப்படிச் சொல்லப் போகிறோம் என்ற விசயமும் அவருக்கு பிடித்திருந்தது.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சிகளின் தாக்கம் எந்த இடத்திலும் வந்துவிடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்தேன். அதே சமயம், சமையல் கலை நிபுணர்கள் தாமு, வெங்கடேஷ் பட் ஆகியோரைச் சந்தித்து நான் சில ஆலோசனைகள் கேட்கவும் செய்தேன். மக்களுக்குத் தெரிந்தது ஒரு சில சமையல் கலைஞர்கள் தான். தெரியாவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிப் படத்தில் சொல்ல வேண்டும் என்று விரும்பினேன்.

இந்தத்துறையில், புட் ஸ்டைலிஷ்ட் என்று சொல்லக்கூடிய உணவு ஒப்பனையாளர் என்ற ஒரு பிரிவு இருக்கிறது. நாம் டிவியில் பார்க்கும் உணவுப் பொருட்கள் தொடர்பான அனைத்து விளம்பரப் படங்களின் பின்னணியிலும் புட் ஸ்டைலிஷ்ட் என்பவர் இருக்கிறார், அவர்கள் மூலம் தான் அந்த விளம்பரங்கள் இரசிகர்களைக் கவரக்கூடியதாக உருவாகிறது. அப்படி ஒருவர் பற்றி பலருக்குத் தெரியாது, அதுபோன்ற கதாபாத்திரங்களைப் படத்தில் வைத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts