விமர்சனம்

விஜயானந்த் – திரைப்பட விமர்சனம்

கன்னடத்தின் முதல் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் எனும் பெருமையுடன் வந்திருக்கும் படம் விஜயானந்த். பதிப்புத்துறையில் இருக்கும் அப்பா வழியில் அத்துறையில் ஈடுபடாமல் சரக்குப் போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டு இந்திய அளவில் பெரிய தொழிலதிபராக திகழும் விஜய்சங்கேவரின் வாழ்க்கைக் கதை உண்மைக்கு மிக நெருக்கமாகப் படமாக்கப்பட்டுள்ளது.

அவருடைய வேடத்தில் நடித்திருக்கும் நிஹால், அவராகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லுமளவுக்கு எதார்த்தமாக நடித்திருக்கிறார்.தொழிலில் போட்டி பொறாமை வருமிடத்தில் திகைத்து பின் அதை எதிர்கொள்ளும் விதம் எல்லோருக்கும் எடுத்துக்காட்டாகத் திகழும் காட்சிகள். மனைவியுடன் இளகுவது எதிர்களிடத்தில் எகிறுவது ஆகிய காட்சிகளில் நடிப்பில் நற்பெயர் பெற்றே ஆகவேண்டுமென அவர் உழைத்திருப்பது தெரிகிறது.

அவருடைய மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீபிரகலாத், நல்ல குடும்பத்தலைவிகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார். அளவான நடிப்பில் அந்த வேடத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.

ஆனந்த்நாக், பரத்போபண்ணா உள்ளிட்டு படத்தில் இருக்கும் நடிகர்களைத் தேடித்தேடி எடுத்தது போல் இருக்கிறது. அதற்கு நியாயமாக அவர்களும் நடித்திருக்கிறார்கள்.

கீர்த்தன்பூஜாரியின் ஒளிப்பதிவில் அந்தக்காலகட்டம் அப்படியே கண்முன் தெரிகிறது. அதற்கான வண்ணங்களையும் அவர் பயன்படுத்தியிருப்பது சிறப்பு.

கோபிசுந்தரின் இசையில் பாடல்கள் கேட்டு இரசிக்கலாம். பின்னணி இசையில் அங்கங்கே பொறி பறக்கிறது.

கலை இயக்கமும் உடைகள் வடிவமைப்பும் பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் விதமாக அமைந்திருக்கிறது.

இன்றும் வாழந்து கொண்டிருக்கும் ஒரு சாதனையாளரின் வாழ்க்கைக்கதையை அனைவரும் இரசிக்கும்படி மட்டுமல்ல அவரே இரசிக்கும்படி படமாக்கி நல்ல இயக்குநர் என்கிற பெயரைப் பெற்றிருக்கிறார் ரிஷிகாசர்மா.

Related Posts