விமர்சனம்

குருமூர்த்தி – திரைப்பட விமர்சனம்

பெரிய தொழிலதிபரான ராம்கி ஒரு வீடு வாங்குவதற்காக 5 கோடி ரூபாய் எடுத்துச் செல்கிறார். அவசரமாக ஒரு மாத்திரை சாப்பிட வேண்டும் என்று ஒரு பெட்டிக் கடையில் நிறுத்தித் தண்ணீர் கேட்கிறார்.அங்கே சிறு சலசலப்பு வருகிறது.அந்தச் சலசலப்பின் முடிவில் திரும்பிப் பார்த்தால் காரில் உள்ள பணப்பெட்டி காணாமல் போய்விடுகிறது.

அதை ஒரு திருட்டுக் கும்பல் எடுத்துச் சென்று விடுகிறது.பயத்தினால் ஒருவர் மறைத்து வைக்க இன்னொருவர் கையில் கிடைக்க இப்படி அந்தப் பெட்டி வெவ்வேறு ஆட்களுக்குக் கைமாறுகிறது.ராம்கி காவல்துறையில் புகார் செய்கிறார்.  

காவல்துறை ஆய்வாளர் நட்டி அப்பெட்டியைத் தேடுகிறார். பணப்பெட்டி யாரிடம் இருக்கிறது? கடைசியில் யாரிடம் போய்ச் சேருகிறது? என்பதுதான் படம்.

காவல்துறை ஆய்வாளர் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்க மெனக்கெட்டிருக்கிறார் நட்டி. மனைவி பிரசவ வலியில் துடிக்கும் நேரத்திலும் கடமை முக்கியம் என்று இருக்கும் காட்சிகளில் காவல்துறையைப் பெருமைப்படுத்துகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் பூனம் பாஜ்வா, பாடல் காட்சிகளில் தாராளம் காட்டி,காதல் காட்சிகளில் நெருக்கம் காட்டி இளைஞர்களை ஈர்க்கிறார். மருத்துவமனையில் பிரசவ வலியில் துடிக்கும் காட்சிகள் நன்று.

காவல்துறையினராக வரும் ரவிமரியா, மனோபாலா ஆகியோரை நகைச்சுவைக்கென வைத்திருக்கிறார்கள்.ஆனால் சிரிப்பு வரவில்லை.

ராம்கிக்குப் பெரிதாக வேலை இல்லை. நிற்கிறார் நடக்கிறார். கடைசியில் கருத்து சொல்கிறார்.

மொட்டை ராஜேந்திரன்,ஜார்ஜ் ஆகியோர் வாங்கிய பணத்துக்கு அதிகமாகவே நடித்திருக்கிறார்கள்.

சஞ்சனா சிங்,அஸ்மிதா ஆகியோர் கவர்ச்சி காட்டுவதற்கென்றே இருக்கிறார்கள்.செக்கச் செவந்தசுந்தரி சேரநாட்டு முந்திரி பாடலில் கவர்ச்சி கொடிகட்டிப் பறக்கிறது.

தேவராஜ் ஒளிப்பதிவில், பசுமையான மலைச்சரிவு பின்புலக் காட்சிகள் பார்ப்பதற்கு இதமாக இருக்கின்றன.

சத்யதேவ் உதயசங்கர் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை சுமார்.

பெரும்பணக்காரர்களின் மோகம், நடுத்தர வர்க்கத்தினரின் பணத்தாசை ஆகியனவற்றோடு காவல்துறையின் பெருமையைக் கலந்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் கே.பி.தனசேகரன். இறுதியில் எல்லோரும் தோப்புக்கரணம் போடுகிறார்கள்.அதுதான் படம் சொல்லும் கருத்து.

Related Posts