விமர்சனம்

லக்கிமேன் – திரைப்பட விமர்சனம்

லக்கிமேன் என்று பெயர் இருக்கும்போதே இது அதிர்ஷ்டம் சம்பந்தமான கதையாக இருக்கும் என நீங்கள் நினைத்திருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்.

நான் அதிர்ஷ்டமில்லாதவன் என்று புலம்பிக்கொண்டேயிருக்கும் யோகிபாபுவுக்கு திடீரென ஒரு அதிர்ஷ்டம். அடி நிலையிலிருந்து மேலே செல்கிறார். பலூனில் காற்றுப் போனது போல திரும்பவும் கீழே வருகிறார். இவற்றுக்கிடையில் என்னவெல்லாம் நடக்கின்றன என்பதைச் சொல்வதுதான் லக்கிமேன்.

நிலத்தரகர் வேடம்தானே என்று அலட்சியமாக நினைக்காமல் அதற்கான உடல்மொழிகளைக் கொண்டுவந்திருக்கிறார் யோகிபாபு. அங்கங்கே நகைச்சுவை, அய்யோபாவம் எனும் நிலை, பணம் வந்ததும் வரும் பகட்டு என எல்லா இடங்களையும் உணர்ந்து நடித்திருக்கிறார்.

யோகிபாபுவின் மனைவியாக நடித்திருக்கிறார் ரேச்சல்ரெபக்கா. கடைசிவிவசாயி படத்தில் நீதிபதியாக வந்து எல்லோரின் பாராட்டையும் பெற்ற அவர், ஒரு நடுத்தரக் குடும்பத்தலைவி வேடத்துக்குக் கனகச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். அவர் பேசும் வசனங்கள் எண்ணற்ற பெண்களின் எதிரொலி.

கதாநாயகனாக வீராவுக்கு இதில் கனமான கதாபாத்திரம். மிடுக்குடன் நடித்து அந்த வேடத்துக்கும் படத்துக்கும் பலம் சேர்த்திருக்கிறார்.

அப்துல் லீ வரும் காட்சிகளில் சிரிப்பு மழை.

ஷான்ரோல்டனின் இசை கதைக்கேற்ப அமைந்து படம் இயல்பாக நகர உதவி செய்திருக்கிறது.

சந்தீப் கே.விஜயன் ஒளிப்பதிவில், யோகிபாபுவின் ஏறி இறங்கும் பொருளியல் நிலையும் காட்சிகளிலும் நிறைந்து வேறுபாட்டைக் காட்டியிருக்கிறது.

பல படங்களில் நடிகராகப் பார்த்த பாலாஜிவேணுகோபால், இந்தப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். திரைப்படங்கள் பொழுதுபோக்குக்கானவை என்றாலும் அதில் சொல்லப்படும் கருத்துகள் மக்களை எளிதில் சென்றடையும் என்பதை உணர்ந்து எழுதியிருக்கிறார்.

உழைப்பே பிரதானம், அதிர்ஷ்டம் என்பது அடுத்ததுதான் எனும் நல்ல கருத்தை பாடமாக எடுக்காமல் நயமாகச் சொல்லி வரவேற்பைப் பெறுகிறார்.

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் படம்.

– குமார்

Related Posts