விமர்சனம்

க பெ ரணசிங்கம் – திரைப்பட விமர்சனம்

வேலைக்காக வெளிநாடு செல்பவர்கள் எதிர்பாராத வகையில் மரணமடைந்துவிட்டால், இங்கிருக்கும் அவர்கள் குடும்பம் அனுபவிக்கும் கொடுமைகளைக் காட்சிப்படுத்திக் கலங்க வைத்திருக்கும் படம் கபெரணசிங்கம்.

தண்ணீர்ப்பஞ்சம் தலைவிரித்தாடும் இராமநாதபுரம் மாவட்டத்தைக் கதைக்களமாகக் கொண்டு இப்படம் உருவாகியிருக்கிறது.

அதனால் தண்ணீர்சிக்கல் உட்பட பொதுக்காரியங்களுக்காகப் போராடுகிறார் ரணசிங்கம் ( விஜயசேதுபதி ).

கூடவே பக்கத்தூரில் இருக்கும் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் மீது காதல்.

காதல் கல்யாணம் வரை செல்கிறது. அதுவரை ஊர்க்காரியங்களுக்கு முன்னுரிமை கொடுத்த விஜயசேதுபதி, வீட்டுக்கும் பயனுடையவராக இருக்கவேண்டும் என்பதற்காக துபாய் செல்கிறார்.

போன இடத்தில் திடீர் மரணம் நிகழ்கிறது. அவருடைய உடலை ஊருக்குக் கொண்டுவர ஐஸ்வர்யா ராஜேஷ் போராடுகிறார்.

போராட்டத்தில் அவர் வென்றாரா? இல்லையா? என்பதே படம்.

விஜயசேதுபதி தன் வேடத்தை அநாயசமாகச் செய்து அனைவரின் வரவேற்பையும் பெறுகிறார். காதலியிடம் குழைவது அதிகாரிகளிடம் துணிவது அநியாயக்காரர்களிடம் வெடிப்பது ஆகிய எல்லா இடங்களிலுமே சிறப்பாகச் செய்து வரவேற்புப் பெறுகிறார்.

துள்ளல் மகிழ்ச்சி துயரம் போர்க்குணம் என எல்லாவற்றிலும் ஏறி அடித்து விளையாடியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். கண்ணகி மதுரைய எரிச்சா இனி ஒவ்வொரு ஊரும் என்னால எரியும் என்று மாவட்ட ஆட்சியரிடம் அழுத்தமாக அறிவிக்கும் இடம், என் மாமனோடு பேசுவதுதான் எனக்கு நிம்மதி என கரையும் இடம் உள்ளிட்ட காட்சிகள் அவர் நடிப்பின் சிறப்பைச் சொல்லும் காட்சிகள்.

வேலராம்மூர்த்தி, பூ இராமு, ரங்கராஜ் பாண்டே,முனீஸ்காந்த், அருண்ராஜா காமராஜ், பாலமுரளிவர்மன் உள்ளிட்டோரும் தங்கள் வேடங்களில் அருமையாக நடித்திருக்கிறார்கள்.

விஜயசேதுபதியின் அப்பாவாக நடித்திருக்கும் பூ இராமு தலைநடுங்குபவர் உடல்மொழியைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

விஜயசேதுபதியின் தங்கையாக நடித்திருக்கும் பவானி கவனிக்க வைக்கிறார். விமான நிலையக் காட்சி மிகச்சிறப்பு.

ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு இராமநாதபுரத்தின் வறட்சியை நம் கண்களுக்கு அப்படியே கடத்துகிறது. இரவுக் காட்சிகள் தத்ரூபமாக அமைந்திருக்கின்றன.

ஜிப்ரானின் இசையில் பறவைகளா பாடல் கலங்க வைக்கிறது. பின்னணி இசை மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கிறது.

சமகால அரசியல் சமுதாயச் சிக்கல்களை அளந்தெடுத்த வரிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார் வசனகர்த்தா சண்முகம் முத்துசாமி.

வெளிநாடுகளில் வேலை செய்வோர் பார்த்தால் கண்கள் குளமாகும் திரைக்கதையை வைத்துக் கொண்டு எளிய மனிதர்களை அரசு இயந்திரமும் அரசு ஊழியர்களும் எவ்வளவு எள்ளலுடன் கையாளுகிறார்கள் என்பதைச் சுருக் கென தைக்கும்படி சொல்லியிருக்கிறார் இயக்குநர் விருமாண்டி.

பிரதமர் மோடி போலவே உருவ அமைப்பில் உள்ள ஒருவரை பிரதமாராக நடிக்க வைத்துள்ள இயக்குநர் அவரை மிக மிக நல்லவராகவும் காட்டியிருக்கிறார்.

நெருட வைக்கும் இக்காட்சியமைப்பு கட்டக்கடைசிக் காட்சியில் சரி செய்யப்படுகிறது. இயக்குநரின் புத்திசாலித்தனத்துக்கு அது நல்ல சான்று.

Related Posts