சினிமா செய்திகள்

கந்துவட்டி ரஜினி – அதிரும் சமூகவலைதளங்கள்

2002-2003 மற்றும் 2004-05-ம் நிதியாண்டுகளில் வருமானத்தை மறைத்ததாகக் கூறி, நடிகர் ரஜினிகாந்த்துக்கு அபராதம் விதிக்கப்பட்ட விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமானவரித் துறை மேல்முறையீடு செய்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை வருமானவரித் துறை நேற்று முன்தினம் திரும்பப் பெற்றது. இதுதொடர்பாக வருமானவரித் துறை தாக்கல் செய்த மனுவில் இடம்பெற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, 2002-03-ம் நிதியாண்டில் 2 கோடியே 63 இலட்சம் ரூபாய் கடன் வழங்கியதாகவும், இதற்கு ஒரு இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் வட்டி பெற்றதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், நிகர வருமானமான ஒரு இலட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கு வரி செலுத்திவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோபாலகிருஷ்ண ரெட்டிக்கு 18 சதவீத வட்டியில் ஒரு கோடியே 95 இலட்சம் ரூபாய் வழங்கியதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதேபோல, அர்ஜுன்லால், சசி பூஷண், சோனு பிரதாப் ஆகியோருக்கு 68 இலட்சம் வழங்கியதாகவும், 2003-04-ம் நிதியாண்டில் முரளி பிரசாத் என்பவருக்கு 10 இலட்சம் ரூபாய் வழங்கியதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

2004-05ம் ஆண்டில் ஒரு கோடியே 71 இலட்சம் ரூபாய் கடன் திரும்ப வரவில்லை என்றும், இதன் காரணமாக, 33 இலட்சத்து 93 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார்.

கடன் கொடுத்ததை தொழிலாகக் கருத முடியுமா? என்று கேட்டபோது, தான் இதனைத் தொழிலாகச் செய்யவில்லை என்றும், தெரிந்தவர்களுக்கு மட்டுமே கடன் கொடுத்துள்ளதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதனை ஏற்று வழக்கை கைவிடுவதாக வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, கந்துவட்டி ரஜினி என்கிற குறிச்சொல்லை உருவாக்கி அதில், அடேய் கந்து வட்டி கோவிந்தா அதான் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கிரில, அப்புறம் ஏன்டா ஸ்கூல் வாடகை கூட கொடுக்காம இருக்க? இது உனக்கு அசிங்கமா தெரியலை?

என்பது உட்பட ரஜினியைக் கடுமையாக விமர்சிக்கும் பதிவுகள் சமூகவலைதளங்களில் இருக்கின்றன.

Related Posts