திடீரென குறுக்கே வந்த ஆர்ஆர்ஆர் – லைகா நிறுவனம் புதிய முடிவு
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “டான்”.புதுஇயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கியிருக்கிறார். ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் மீண்டும் அவருடன் இணைந்து நடித்துள்ளார்.
இவர்களுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன்,ஆர்.ஜே.விஜய், சிவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி, ஜார்ஜ், ஆதிரா மற்றும் பல நடிகர்கள் ‘டான்’ படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப்படத்தின் வெளியீட்டுத் தேதியை நேற்று (சனவரி 31,2022) காலை பத்துமணி பத்து நிமிடத்தின் போது அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
அதன்படி, மார்ச் 25 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.
இந்த அறிவிப்பு வெளியானது முதல் சிவகார்த்திகேயன் இரசிகர்கள் அதனைப் பகிர்ந்து கொண்டாடிவந்தார்கள்.
ஆனால், அவர்களுடைய மகிழ்ச்சி சில மணி நேரங்கள் கூட நீடிக்கவில்லை.
ஏற்கெனவே மார்ச் 18 அல்லது ஏப்ரல் 28 என்று சொல்லியிருந்தது ராஜமெளலியின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் ஆர் ஆர் ஆர் படக்குழு. அவர்கள் திடீரென தங்கள் முடிவை மாற்றி மார்ச் 25 ஆம் தேதி ஆர் ஆர் ஆர் வெளியாகிறது என்று அறிவித்துவிட்டார்கள்.
அந்தப்படத்தையும் தமிழில் லைகா நிறுவனமே வெளியிடவிருக்கிறது. லைகாவின் காலை அறிவிப்பைக் கணக்கில் கொள்ளாமல் ஆர் ஆர் ஆர் படக்குழு தேதியை அறிவித்துவிட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த லைகா நிறுவனம் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், டான் படத்தின் வெளியீட்டுத்தேதியைத் தள்ளி வைக்க முடிவு செய்திருக்கிறதாம்.
அடுத்து ஏப்ரல் 14 ஆம் தேதியன்று விஜய்யின் பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் 2 ஆகிய படங்கள் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அதனால் ஏப்ரல் 28 ஆம் தேதி டான் படத்தை வெளியிட லைகா நிறுவனம் முடிவு செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஏப்ரல் 14 அன்று வெளியாகுமெனச் சொல்லப்பட்டிருக்கும் கேஜிஎஃப் 2 மீண்டும் தள்ளிப்போகும் என்றும் ஒரு பேச்சு இருக்கிறது. அப்படி நடந்தால் டான் வெளியீடு மேலும் தள்ளிப்போகலாம் என்கிறார்கள்.











