விக்ரம்பிரபுவின் டைகர் படம் உருவான கதை
விக்ரம் பிரபு நடித்துள்ள ‛டாணாக்காரன்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இதையடுத்து ‛டைகர்’ என்ற புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார். கார்த்திக் என்பவர் இயக்க, இயக்குநர் முத்தையா திரைக்கதை, வசனம் எழுதுகிறார். நாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்க, முக்கிய வேடத்தில் பி.வாசுவின் மகன் ஷக்தி நடிக்கிறார். சாம்.சிஎஸ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்கியது.
இயக்குநர் கார்த்தி படம் குறித்துக் கூறுகையில்,
டைகர் படம் ஆரம்பம் முதல் இறுதி வரை இரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைக்கும், பரபர த்ரில்லராக இருக்கும். ஒரு திரைக்கதை எழுத்தாளராக இந்தத் திரைப்படத்தில் இயக்குநர் முத்தையா பங்களிப்பது உண்மையில் உணர்வுப்பூர்வமாக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. இது நிச்சயமாக பார்வையாளர்களை ஈர்க்கும். ஒரு நல்ல திரையரங்கு அனுபவத்தைத் தரும் படமாக இருக்கும்
என்று கூறியுள்ளார்.
இந்தப்படம் நேரடித்தமிழ்ப்படம் இல்லையாம். கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற தகரு என்கிற படத்தின் தமிழாக்கம்தான் இது என்கிறார்கள்.
அப்படத்தின் உரிமையை வாங்கி வைத்திருந்தாராம் முத்தையா. அவரே இயக்கவேண்டும் என்பதற்காக உரிமையை வாங்கி வைத்திருந்தாராம்.ஆனால் வரிசையாகப் படங்கள் அமைந்ததால் அப்படத்தை இயக்க இயலவில்லையாம்.
இதற்கிடையே, அவரிடமே உதவியாளராக இருந்த அவருடைய உறவினர் கார்த்தி இயக்குநராக வேண்டும் என்பதற்காக இந்தக்கதையைக் கேட்டிருக்கிறார். முதலில் தயங்கிய முத்தையா உறவினர்களின் வலியுறுத்தலால் விட்டுக்கொடுத்திருக்கிறாராம்.
வெற்றி பெற்ற கன்னடப்படம் என்பதால்தான் விக்ரம்பிரபு ஷக்தி உள்ளிட்டோர் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.









