இமைக்கா நொடிகள் – திரைப்பட விமர்சனம்
பெங்களூரு நகரத்தில் வரிசையாகக் கொலைகள் நடக்கின்றன. அதை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் அதிகாரி அஞ்சலி விசாரிக்கிறார். அவர் குற்றவாளியைக் கண்டுபிடிக்க எடுக்கும் நடவடிக்கைகள்தாம் படம்.
சிபிஐ அதிகாரியாக நடித்திருக்கும் நயன்தாரா, தொடக்கத்திலிருந்து அந்த வேடத்துக்குரிய மிடுக்குடன் வலம்வருகிறார். ஆனால், வரிசையாகச் சொல்லியடிக்கிற கொலைகாரனை நெருங்க முடியாமல் திணறுகிறார்.
இது ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கும் போதே இன்னொரு பக்கம் நயன்தாராவின் தம்பி அதர்வாவுக்கும் உடன் படிக்கும் ராஷிகண்ணாவுக்கும் காதல் அதன்பின் மோதல் என்று இன்னொரு கதை நடக்கிறது.
அதர்வாவை நடிக்க வைத்துவிட்டோம் என்பதற்காகக் கதைக்குத் தேவைப்படுகிறதோ இல்லையோ அவருக்குப் பாடல் மற்றும் சண்டைக்காட்சிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
அவர் அதற்காக மெனக்கெட்டு நடித்துகொண்டிருந்தாலும் சீக்கிரம் முடிங்கப்பா என்று சொல்ல நேர்கிறது.
குடித்துவிட்டு வண்டி ஓட்டக்கூடாது என்று தெளிவாக இருக்கும் அதர்வா, நடுச்சாலையில் மது பாட்டிலைப் போட்டுடைப்பதை எந்தக் கணக்கில் சேர்ப்பது?
இந்தப்படத்தின் ஊறுகாய் ராஷிகண்ணா. அதர்வா மற்றும் நயன்தாராவைப் பழி வாங்க ராஷிகண்ணாவைப் பயன்படுத்துகிறார் வில்லன்.
வில்லனாக நடித்திருக்கும் இந்திநடிகர் அனுராக் காஸ்யப் படம் நெடுக வருகிறார். நல்லாப் பேசுறாரே யாரு இவரு என்று கேட்க வைத்திருக்கிறார். எடுத்துகொண்ட வேலைக்கு உண்மையாக இருக்கவேண்டும் என்று உழைக்கிறவர் எப்படித் தவறான மனிதராவார். அதற்காக மனைவியைக் கொலை செய்வது ஏன்? என்கிற கேள்விகள் எழுகின்றன.
ஒரு பாடல் மற்றும் சில காட்சிகளில் வருகிற விஜயசேதுபதி பழுதில்லை.
ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு கதைக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறது.
ஹிப்ஹாப் தமிழா இசையில், நீயும் நானும் அன்பே என்கிற கபிலனின் பாடல் கேட்கவும் பார்க்கவும் நன்றாக இருக்கிறது. ஆனால் படத்தில் அது இடம் பெற்றிருக்கிற இடம் சரியல்ல.
அதர்வாவைக் கதாநாயகனாக வைத்து ஒரு திரைக்கதை எழுதி விட்டு அக்கா வேடத்துக்கு நயன்தாரா வந்ததும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதால் இயக்குநர் அஜய்ஞானமுத்து தடுமாறிவிட்டார் போலும். அது படத்தில் நன்றாகத் தெரிகிறது.
அதுமட்டுமின்றி வரிசையாக நடக்கும் கொலைகளுக்கான மூலக்காரணம் அழுத்தமானதாக இல்லாமல் செயற்கையாக இருக்கிறது.
உலகில் நடக்கும் எல்லாச் செயல்களுக்கும் அடிப்படையாக இருப்பது காதல் என்று சொல்லியிருக்கும் இயக்குநர்,
ஈவு இரக்கமின்றி முக்கால் மணி நேரப்படத்தை வெட்டிப் போட்டால், நம்ப முடியாத காட்சிகள் மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் ஆகிய எல்லாக் குறைகளையும் தாண்டி விறுவிறுப்பான படமாக இருந்திருக்கும்.











