விமர்சனம்

மெர்க்குரி – விமர்சனம்

சனந்த், தீபக், சஷாங்க், அனிஷ், இந்துஜா ஆகிய ஐந்து நண்பர்கள் ஒன்றாக இருக்கிறார்கள். இவர்கள் காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள்.

ஐந்து பேரில் ஒருவர் பெண் என்றால் அவரை ஒருவர் காதலித்தாக வேண்டும் என்பது தமிழ்த்திரையுலகின் தலைவிதி.இப்படத்தில் இந்துஜாவைக் காதலிக்கிறார் சனந்த்.

மலையும் மலை சார்ந்த இடத்தில் நள்ளிரவில் தன் காதலைச் சொல்கிறார் சனந்த். இந்துஜாவும் மகிழ்வுடன் ஒப்புக்கொள்கிறார்.

மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. எதிரபாராத ஒரு விபத்து. ஐந்து பேரின் வாழ்க்கையையும் புரட்டிப்போட்டுவிடுகிறது.

என்ன நடந்தது? அதன்பின் என்ன நடக்கிறது? என்பதைப் பயம் கலந்த ஆர்வத்துடன் பார்க்கவைத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

இடைவேளைக்குச் சற்றுமுன்னர் வருகிற பிரபுதேவா, கண்களாலேயே நடித்திருக்கிறார். எல்லாப்படங்களிலும் நடனமாடி நமமை மகிழ வைத்த பிரபுதேவா, இப்படத்தில் நம்மை மிரட்டுகிறார்.

நண்பர்களாக நடித்திருக்கும் நான்கு பேரும் பொருத்தமாக இருக்கிறார்கள். தமிழ்த்திரையுலகுக்கு நான்கு நாயகர்கள் தயார்.

மேயாதமான் இந்துஜாவுக்கு இந்தப்படம் நற்பெயரைப் பெற்றுத்தரும். கடைசிக்காட்சியில், சைகை மொழியில் பிரபுதேவாவிடம் தங்கள் கதையைச் சொல்லும் காட்சி நெகிழ வைக்கிறது.

வசனங்கள் இல்லாத படத்தில் பின்னணி இசையே முக்கியத்துவம் பெறும். அதை உணர்ந்து பணியாற்றியிருக்கிறார் சந்தோஷ்நாராயணன். அவ்வப்போது அதிர வைத்துவிட்டு அமைதியாகவே பயமுறுத்துகிறார்.

திருவின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம். இந்துஜாவும் சனந்தும் காதலைச் சொல்லிக்கொள்ளும் காட்சி மிக நன்று.

போபாலில் ஆயிரக்கணக்கான மக்களை அழித்தொழித்த யூனியன் கார்பைடு நிறுவனம் போன்றதோரு பாதரச நிறுவனத்தின் பாதிப்பைச்
முகத்திலறைகிறாற்போல் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்,

நாம் தவறான எதிரிகளுடன் போராடுகிறோம் என்கிற சிறப்பான கருத்தை, சத்தமாகச் சொல்லவேண்டிய கருத்தை சைகை மொழியில் சொல்லிவிட்டாரே என்கிற வருத்தம் இருக்கிறது.

Related Posts