விமர்சனம்

அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்

சென்னையில் துப்புரவுத்தொழிலாளியாகப் பணியாற்றும் ஒரு பெண்மணி,கணவர் இல்லாமல் இரண்டு குழந்தைகளை – ஒரு மகன்,ஒரு மகள் -ஆகியோரைப் படிக்கவைத்து ஆளாக்க உழைக்கிறார்.அவர்கள் குடியிருக்கும் வீடு எனும் கூட்டை இடித்து அப்புறப்படுத்த அரசாங்கம் துடிக்கிறது.வேலை செய்யும் இடமிடத்தில் கேள்வி கேட்டால் தண்டனை போன்ற பல சிக்கல்களை அந்தப் பெண்மணி எதிர்கொள்கிறார்.

அவருடைய மகன்,தடகள் ஓட்டப்பந்தய வீரராக இருக்கிறார்.போதிய வசதிகள் இன்றியே ஓடுகளத்தில் பல சாதனைகள் செய்கிறார்.ஆனாலும் அவர் மீது வன்மம் கொண்டு அவரை காமன்வெல்த் எனும் சர்வதேசப் போட்டியில் விளையாட அனுமதிக்க மறுக்கின்றன விளையாட்டு ஆணையங்கள்.வலிமையும் அதிகாரமுமிக்க அவற்றை எதிர்த்து ஒற்றை ஆளாக நீதிமன்றம் சென்று தனக்காக தானே வாதாடுகிறார் அவர்.

அந்த வழக்கின் முடிவென்ன?அவர் சர்வதேசப் போட்டியில் விளையாடினாரா? இல்லையா? என்கிற கேள்விகளுக்கான விடைதாம் அங்கீகாரம் திரைப்படம்.

விளையாட்டு வீரராக,கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் அறிமுக நடிகர் கே.ஜே.ஆர்.அந்த வேடத்துக்காக மிகுந்த உழைப்பைச் செலுத்தியிருப்பது புலனாகிறது.தோற்றத்தில் மாற்றம்,நடை உடை பாவனைகளில் கவனம் ஆகியனவற்றோடு உணர்ச்சிப்பூர்வமான நடிப்பிலும் குறைவின்றிச் செய்திருக்கிறார்.அவர் கண்ணிலிருந்து கண்ணீர்த்துளி விழும்போது ஒட்டுமொத்த அரங்கமும் கலங்குகிறது.நீதிமன்றத்தில் அவர் எடுத்து வைக்கும் ஆவேசமான வாதங்கள் அதிகாரங்களின் மீதான சம்மட்டி அடியாக விழுந்திருக்கின்றன.எல்லோரையும் விட எனக்கு நான் முக்கியம் என்று அவர் முடிக்கும்போது அரங்கில் கைதட்டல்கள்.

நாயகனுடன் ஓட்டப்பந்தய வீராங்கனையாக நடித்திருக்கும் சிந்தூரி விஸ்வநாத் சிறப்பு.உயரதிகாரியிடம் சீறும் காட்சி அம்மாவிடம் அடங்கும் காட்சியும் அருமை.

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ரமா,சென்னை துப்புரவுத் தொழிலாளிகளின் பிரதிநிதி போலவே வாழ்ந்திருக்கிறார்.அவ்வளவு அடிகள் வாங்கும்போதும்,உன் காலத்திலேயே நீ முன்னேறணும் என்று தன்னம்பிக்கை ஊட்டுவது நாயகனுக்கு மட்டுமன்று அவர் போன்ற அனைவருக்குமானது.

அரசுத்தரப்பு வழக்குரைஞராக நடித்திருக்கும் விஜிவெங்கடேஷ்,அதிகார வர்க்கத்தினரின் அலட்சிய உடல்மொழி,அநாகரிக பேச்சுகள்,அடாவடித்தனங்கள் ஆகியனவற்றைச் சரியாக வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.

விளையாட்டு ஆணையத்தில் கணக்காளராக நடித்திருக்கும் ஆண்டனியின் வேடமும் நடிப்பும் நன்று.

நீதிபதிகளாக நடித்திருக்கும் மோகன்ராம்,ரங்கராஜ் பாண்டே அமைச்சராக நடித்திருக்கும் மன்சூர் அலிகான் ஆகியோரும் வேடத்துக்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

ஏ.விஸ்வநாத்தின் ஒளிப்பதிவில்,நாயகனின் வீடு அதன் சுற்றுப்புறம் ஆகியனவற்றைப் பார்க்கும்போது நெஞ்சம் கலங்குகிறது.விளையாட்டு மைதானங்களிலும் நீதிமன்ற அறையிலும் பல்வேறு கோணங்களை வைத்து விளையாடியிருக்கிறார்.

ஜிப்ரானின் இசையில் பாடல்கள் கேட்டு இரசிக்கவும் உணர்ந்து விம்மவும் வைத்திருக்கின்றன.பின்னணி இசை படத்துக்குப் பெரும்பலமாக அமைந்திருக்கிறது.

பீட்டர்ஹெயினின் சண்டைப்பயிற்சியில் இடம்பெற்றிருக்கும் ஒரு சண்டைக்காட்சி, நாயகன் கேஜேஆர்,ஆக்சன் ஹீரோவாகவும் நடிக்கத் தகுதியானவர் என்பதை உணர்த்தியிருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கிறார் ஜே.பி.தென்பாதியான்.ஒரு தடகளவீரர் அவருடைய போராட்டம் என்கிற கதைக்குள் அடித்தட்டு மக்கள் வாழ்வில் இருக்கும் ஒட்டுமொத்தச் சிக்கல்களையும் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.கருத்தாக அவை பலமெனினும் படத்தின் ஓட்டத்துக்குத் தடை போடுகிறது.

பூமி தன்னைத்தானே சுற்றி கொண்டு சூரியனையும் சுற்றுவது போல்,இந்தக் கதைநாயகனின் போராட்டத்தோடு இந்த நாட்டின் விளையாட்டு என்றாலே கிரிக்கெட் எனும் மட்டைப்பந்து மட்டுமில்லை 33 வகையான விளையாட்டுகள் இருக்கின்றன அவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்கிற விளக்கங்கள் வியக்க வைக்கின்றன.

படத்தின் இறுதிக்காட்சி பேரதிர்வையும் பெரும் நம்பிக்கையையும் கொடுக்கின்றன.

– அன்பன்

Related Posts