கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் ஜூன் 24,2026 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்….
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கமல்ஹாசன் பெருமையுடன் வழங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்
“தர்மன்”.
இயக்கம்: அஸ்வத் மாரிமுத்து,இசை: அனிருத் ரவிச்சந்தர்,சண்டைப் பயிற்சி: அன்பரிவ்,
தயாரிப்பு: கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன்
ஜூன் 24, 2026
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படம் ‘தர்மன்’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது.படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.
கமல்ஹாசன்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவருமே கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேல் இந்திய சினிமாவின் உச்சநட்சத்திரங்களாகத் திகழ்பவர்கள்.இந்த இருபெரும் நாயகர்களுக்கு இடையேயான நட்பு அரிதானது.இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பிரியமும் மரியாதையும் அபூர்வமானது.கமல்ஹாசன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்தத் திரைப்படம் இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு நிகழ்வு.
தரமான திரைப்படங்களை இரசிகர்களுக்குத் தரவேண்டும் என்பதில் 46 ஆண்டுகளாக எவ்வித சமரசமும் இன்றி செயல்பட்டு வரும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைவது இதுவே முதல்முறை.
ஓ மை கடவுளே,டிராகன் போன்ற ப்ளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய,இன்றைய ஜென் Z தலைமுறையால் இளமை இயக்குநர் என்று கொண்டாடப்படும் அஸ்வத் மாரிமுத்து இந்தப்படத்தை இயக்குகிறார்.தனது துள்ளல் இசையால் உலகளவில் இரசிகர்களைப் பெற்றிருக்கும் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சிம்ரன்,தமிழ்,இந்தி,தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தனது சிறந்த நடிப்பால் இரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற ராஷி கன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அதிரடி சண்டைக் காட்சிகளுக்காக தேசியவிருதுகளை வென்ற அன்பரிவ் மாஸ்டர்ஸ், ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மிரெட்டி, தயாரிப்பு வடிவமைப்பாளர் கார்த்திக் ராஜ்குமார், எடிட்டர் பிரதீப் ஈ.ராகவ்,கலை இயக்குநர் அண்ணாதுரை என இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தப்படத்தில் பங்காற்றுகிறார்கள்,மேலும் இணை தயாரிப்பாளராக டிஸ்னி இணைந்து தயாரிக்கிறார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மைல்கல் திரைப்படமான ‘தர்மன்’ படத்தின் தொடக்க விழா மற்றும் முதற்கட்ட படப்பிடிப்பு,படக்குழுவினர்,தயாரிப்பு குழுவினர் மற்றும் முக்கிய விருந்தினர்கள் முன்னிலையில் இன்று சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது.
இந்தத் தொடக்க விழாவில் திரு.கலைப்புலி எஸ்.தாணு, திரு.அன்புச்செழியன்,திரு.ஆர்.கே.செல்வமணி,திரு.லிங்குசாமி,திரு.கண்ணன் (CTO, சன் நெட்வொர்க்),திரு.செண்பகமூர்த்தி,
திரு.தமிழ் குமரன்,திரு.கிருஷ்ணன் குட்டி(JIO Star),திரு.பாலசந்திரன் (JIO Star),திரு.பிரதீப் மில்ராய் பீட்டர் (JIO Star),திரு.ஆனந்த் (Saregama) மற்றும் திரு.சரவணன் வினோத் உள்ளிட்ட திரைப்படத் துறையைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்களும் துறை சார்ந்த தலைவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்து பெரும் மகிழ்வான நிகழ்வாக அமைந்தது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












