விமர்சனம்

பாம் – திரைப்பட விமர்சனம்

ஒரு கிராமம் இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது.அடிக்கடி மோதல்கள்.அதனால் அந்த மக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று நினைக்கும் ஒருவர் திடீரென இறந்து போகிறார்.அவருடைய மரணத்துக்குப் பின் ஓர் அதிசயம் நடக்கிறது.அதை வைத்து அந்த ஒருங்கிணைப்பை சாத்தியப்படுத்த முயல்கிறார் நாயகன்.அவர் நினைத்தது நடந்ததா? இல்லையா? என்பதை சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கும் படம்தான் பாம்.

இதுவரை பார்த்திராத மாறுபட்ட வேடத்தை ஏற்றிருக்கிறார் நாயகன் அர்ஜுன்தாஸ்.அதற்காக தோற்றத்திலும்,நடிப்பிலும் அந்த மாறுபாட்டைக் காட்டியிருக்கிறார்.இவர் இப்படித்தான் என்று முடிவு செய்துவிட முடியாதபடியாக இப்படத்தின் வேடமும் நடிப்பும் அமைந்திருப்பது அவருக்குப் பலம்.

ஷிவாத்மிகா ராஜசேகர் நாயகியாக நடித்திருக்கிறார்.நாயகன் மீது காதல் சகோதரன் மீது பாசம் ஆகியனவற்றை அளவாக வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் காளிவெங்கட்தான் படத்தின் அடிநாதம்.தொடக்கத்தில் சில காட்சிகளில் உயிரோடு இருக்கும் அவர் மீதிக் காட்சிகளில் எல்லாம் சவமாக நடித்திருக்கிறார்.அதிலும் தன்னைக் கவனிக்க வைத்திருப்பது அவருடைய தனித்தன்மை எனலாம்.

அரசியல் தலைவராக நடித்திருக்கும் நாசர், சிங்கம்புலி, கிச்சா ரவி, அபிராமி, பால சரவணன், ராட்சசன் சரவணன் ஆகியோர் அவரவர் வேலைகளை சரியாகச் செய்திருக்கிறார்கள்.

ராஜ்குமார்.பி.எம் ஒளிப்பதிவில் கிராமத்து அழகும் கிராமத்து மனிதர்களின் குணங்களும் கூட காட்சிகளில் வெளிப்பட்டிருக்கின்றன.

டி.இமானின் இசையில் பாடல்கள் நன்றாக அமைந்திருக்கின்றன.பின்னணி இசையில் திரைக்கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கிறார் விஷால் வெங்கட்.மூடநம்பிக்கை மற்றும் சாதி, மத உணர்வுகளை வைத்து மக்களைப் பிரித்தாளும் அரசியல்வாதிகள் மற்றும் ஆதிக்கத்தினர் ஆகியோரை அம்பலப்படுத்துவதோடு,ஏமாந்து கொண்டிருக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கதை எழுதியிருக்கிறார்.

அதை நேரடியாகச் சொல்லாமல் இறந்த உடலிலிருந்து அசுத்தக் காற்று வெளியேறுகிறது என்று யாரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத விசயத்தை வைத்துச் சொல்லியிருப்பதில் கவனிக்க வைத்திருக்கிறார்.

– இளையவன்

Related Posts