சினிமா செய்திகள்

கூலி படத்தோடு சிம்பு பட அறிவிப்பு – கலைப்புலி தாணு தடாலடி

பார்க்கிங் பட இயக்குநர் இராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் சற்றும் எதிர்பாராமல் தள்ளிப்போனது.அதிலிருந்து உடனே மீண்டு அடுத்த படத்தை முடிவு செய்தார் சிம்பு.அது வெற்றிமாறன் இயக்கும் படம்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார் கலைப்புலி தாணு தயாரிக்கிறார் என்பதை ஜூன் 30 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் வெற்றிமாறன்.

அவர் அறிவிப்பதற்கு முன்பே அப்படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டன. ஜூன் 16,17 ஆகிய நாட்களில் அப்படத்துக்கான படப்பிடிப்பு நடந்து முடிந்தது.பட அறிவிப்பையே ஒரு காணொலியாக வெளியிட வேண்டும் என்பதற்காக அந்தப் படப்பிடிப்பு நடந்தது.

அன்று காலை எட்டுமணிக்கெல்லாம் படப்பிடிப்புத் தளத்துக்கு வந்து விளம்பரப் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் சிம்பு.

சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் நடந்த அந்த விளம்பரப்படப்பிடிப்பில் 200 க்கும் மேற்பட்ட துணைநடிகர்களுடன் சிம்பு மற்றும் இயக்குநர் நெல்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இப்போதைக்கு இந்த விளம்பரத்தில் மட்டும் நடிக்கவிருக்கும் நெல்சன், தேவைப்பட்டால் படத்திலும் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.

வெற்றிமாறன் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த வடசென்னைக்கு முந்தையதான ராஜன் வகையறா திரைக்கதைதான் படமாகவிருக்கிறது என்று சொல்லப்பட்டது.

ஜூன் 16,17 ஆகிய நாட்களில் நடந்த படப்பிடிப்பில், ஒரு தோற்றத்தின் படப்பிடிப்பை நடத்தினார்கள்.அதன்பின் ஜூலை 2,3 ஆகிய நாட்களில் நடந்த படப்பிடிப்பில் இன்னொரு தோற்றத்திற்கான படப்பிடிப்பு நடந்தது.

அந்தப் படப்பிடிப்பு நடக்கும்போதே இம்மாத இறுதியில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றார்கள். ஆனால் மாதம் முடிந்துவிட்டது. படப்பிடிப்பு தொடங்கவில்லை.

சம்பளச் சிக்கல் காரணமாக முடிவு எட்டப்படவில்லை என்பதால் படப்பிடிப்பு தொடங்கவில்லை என்று சொல்லப்பட்டது.

ஆனால் உண்மை வேறாக இருக்கிறது.

அது என்ன?

பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப்படத்தின் அறிவிப்பையே பெரிதாகச் செய்யத் திட்டமிட்டிருக்கிறாராம் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.

இப்படத்தின் அறிவிப்பு காணொலியை, ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகும் ரஜினியின் கூலி பட இடைவேளையில் திரையரங்குகளில் திரையிடத் திட்டமிட்டிருக்கிறாராம்.

ஒரு புதிய படத்தின் அறிவிப்பு அது எல்லாக் காட்சிகளும் நிரம்பி வ்ழியவிருக்கும் கூலி பட திரையரங்குகளில் வெளியாவதால் நேரடியாக மக்களிடம் சென்று சேர்ந்துவிடும்.அது அந்தப் படத்துக்கு மிகப்பெரிய விளம்பரமாக அமையும்.சிம்பு வெற்றிமாறன் உள்ளிட்ட படக்குழுவினரும் பெரிதும் மகிழ்ந்து வேகமாக வேலைகளைச் செய்துகொடுப்பார்கள் என்பது தயாரிப்பாளரின் கணக்கு என்கிறார்கள்.

வெற்றிக் கணக்குதான் வெல்லட்டும்.

Related Posts