பாண்டிராஜ் விஜய்சேதுபதி கூட்டணியில் மணிகண்டன் – புதிய தகவல்
ஜூலை 25 ஆம் தேதி தலைவன் தலைவி படம் வெளியானது.பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி,நித்யா மேனன் உட்பட பலர் நடித்திருந்த அந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.
அப்படம் முதல் மூன்று நாட்களிலேயே 25 கோடி வசூல் செய்திருக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறித்துள்ளனர்.இவ்வளவுக்கும் விஜய்சேதுபதியின் இதற்கு முந்தையபடமான ஏஸ் தோல்வி அடைந்திருந்தது.
ஆனால்,இந்தப்படம் நல்ல வசூலைப் பெற்று படக்குழுவுக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
இதன் உடனடி விளைவாக மீண்டும் பாண்டிராஜ் விஜய்சேதுபதி கூட்டணி உறுதியாகியிருக்கிறது என்கிறார்கள்.
என்ன நடந்தது?
விஜய்சேதுபதியை வைத்து ஒரு படம் தயாரிக்க லைகா நிறுவனம் முன்வந்திருக்கிறது.விஜய்சேதுபதிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பே முன்தொகை கொடுத்து வைத்திருந்தார்களாம்.அதை வைத்து இப்போது ஒரு படம் எடுக்க அந்நிறுவனம் முன்வந்திருக்கிறது.
தலைவன் தலைவி பட வெளியீட்டுகு முன்பாக சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சி இலண்டனில் நடந்தது.அதற்காக விஜய்சேதுபதி பாண்டிராஜ் ஆகியோர் சென்றிருந்தனர்.அப்போது லைகா நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி தமிழ்க்குமரனும் இலண்டன் சென்றிருந்தார்.
மூவரும் லைகா நிறுவனர் சுபாஸ்கரனைச் சந்தித்திருக்கிறார்கள்.அப்போது தலைவன் தலைவி பட வெளியீட்டுக்குப் பிறகு,விஜய்சேதுபதி நடிக்கும் பட அறிவிப்பை வெளியிடலாம் என்றும் அப்படத்தை பாண்டிராஜ் இயக்குவார் என்பதையும் அறிவிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
ஒரு படம் வெளியாவதற்கு முன் இதுபோன்ற முடிவுகள் எடுக்கப்பட்டாலும் அந்தப்படம் வெளியாகி வெற்றி பெற்றால்தான் அந்த முடிவுக்குச் செயலாகும்.
இப்போது அது நடந்திருக்கிறது என்கிறார்கள்.
தலைவன் தலைவி வெற்றி என்றதும் அந்தக் கூட்டணியை உறுதி செய்திருக்கிறார்கள்.
இந்தக் கூட்டணியில் மேலும் ஒரு பலமாக நடிகர் மணிகண்டனும் இந்தக்கூட்டணியில் இணையவிருக்கிறார் என்கிறார்கள்.
மணிகண்டன் நடிப்பில் வெளியான குட்நைட்,லவ்வர்,குடும்பஸ்தன் ஆகிய படங்கள் வெற்றி என்பதால் அவர் தனிக்கதாநாயகனாகவே வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் விஜய்சேதுபதி நடிக்கும் படத்தில் அவரும் நடிக்கவிருக்கிறார் என்பது அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்வதோடு படத்தின் வியாபாரத்தையும் உயர்த்தும் என்றும் சொல்லப்படுகிறது.
விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அறிவிப்பு வெளியானபின் சில மாதங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்றும் சொல்கிறார்கள்.
நன்றாக நடக்கட்டும்











