சப்தம் படம் நேற்று வெளியாகவில்லை ஏன்? – பரபரப்பு தகவல்கள்
இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சப்தம்’. இந்தப்படத்தில் ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார்.‘ஈரம்’வெற்றிக்குப் பிறகு 15 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ள படம் இது என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
இந்தப் படத்தில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்க முக்கிய வேடங்களில் சிம்ரன், லைலா,எம்.எஸ்பாஸ்கர், ராஜீவ் மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.அமானுஷ்ய திரில்லர் ஜேனரில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
7ஜி ஃபிலிம்ஸ் சிவா தயாரிப்பில் உருவான இந்தப்படம் பிப்ரவரி 28 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி,தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தப்படம் நேற்று வெளியாகிவிட்டது.ஆனால் தமிழ்நாட்டில் படம் வெளியாகவில்லை.
ஏன்?
இந்தப்படம் தயாரிப்பதற்காக வாங்கிய கடனை தயாரிப்பாளர் 7ஜி சிவா உரிய நேரத்தில் திருப்பிக் கொடுக்கவில்லையாம். இதனால் படம் தயாரிக்கப் பணம் கொடுத்த நிதியாளர் தடையில்லாச் சான்று கொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.அதனால் திட்டமிட்டபடி நேற்று காலை படம் வெளியாகவில்லை.
மொத்தம் ஒன்பது கோடி ரூபாய் சிக்கல் இருந்திருக்கிறது. இவற்றில் மூன்று கோடி ரூபாயை ஆந்திரா கர்நாடகா உரிமை பெற்ற விநியோகஸ்தர் செலுத்திவிட்டாராம்.அதனால் அந்த மாநிலங்களில் படம் சொன்னபடி வெளியாகிவிட்டது.
மீதமுள்ள ஆறு கோடி ரூபாய் கொடுக்கப்படாததால் தமிழ்நாட்டில் படம் வெளியாகவில்லை.இதனால் நேற்று முழுக்க அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுப்பது பற்றிய பேச்சுகள் நடந்திருக்கின்றன.
விநியோகஸ்தர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் மூலம் சுமார் ஐந்தேகால் கோடி கொடுக்கப்படும் என்று உத்தரவாதம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மீதமுள்ள பணத்துக்கு என்ன செய்வது? என தயாரிப்பாளர் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் கதாநாயகன் ஆதி மற்றும் இயக்குநர் அறிவழகன் ஆகியோர் உதவி செய்திருக்கின்றனர்.
சுமார் ஐம்பது இலட்சம் ரூபாய்க்கு ஆதியும் சுமார் முப்பத்தைந்து இலட்சத்துக்கு இயக்குநர் அறிவழகனும் பொறுப்பேற்றுக் கொண்டனர் என்று சொல்லப்படுகிறது.
இதனால் எல்லாச் சிக்கல்களும் முடிந்து நேற்றிரவு படம் வெளியாகிவிடும் என்று சொல்லப்பட்டது.ஆனால் நேற்றிரவும் படம் வெளியாகவில்லை. இன்று காலைக்காட்சியிலிருந்து படம் ஓடும் என்று சொல்லப்பட்டது.
முதல்நாளில் படம் வெளியாகவில்லை என்பதால் படக்குழுவினர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.இரசிகர்களும் ஏமாற்றமடைந்தனர்.











