September 12, 2026
சினிமா செய்திகள்

வரிகளை முழுமையாகக் கட்டுங்கள் – நடிகர் தனுஷுக்கு உயர்நீதிமன்றம் குட்டு

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த சொகுசு மகிழுந்துக்கு தமிழக அரசு விதித்த நுழைவு வரியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வழக்கை தள்ளுபடி செய்ததுடன், நடிகர் விஜய்க்கு ரூ.1 இலட்சம் அபராதமும் விதித்தார். கடும் கண்டன கருத்துகளையும் விஜய்க்கு எதிராக தெரிவித்து இருந்தார்.

அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு செய்து, அபராதம் விதித்ததற்கு இடைக்கால தடை பெற்றுள்ளார்.

இந்நிலையில், நடிகர் விஜய்யைப் போல, 2015 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவநதது.

2015 ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து நடிகர் தனுஷ் இறக்குமதி செய்த சொகுசு மகிழுந்துக்கு ரூ.60.66 இலட்சம் நுழைவு வரி விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தனுஷ் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 50 சதவீத வரியைச் செலுத்தி சொகுசு மகிழுந்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று 2016 ஆம் ஆண்டு உத்தரவிட்டார். அதன்படி அந்த மகிழுந்தை தனுஷ் பதிவுசெய்து கொண்டார்.

இந்தநிலையில், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்துவந்த நடிகர் தனுஷின் வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. அதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்குவதாக நீதிபதி அறிவித்தார்.

இந்நிலையில், நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறியதாவது:-

மனுதாரர் என்ன தொழில் செய்கிறார் என மனுவில் தெரிவிக்காதது ஏன்? பணியையோ அல்லது தொழிலையோ குறிப்பிட வேண்டியது அவசியமில்லையா?

ரூ.50 க்கு பெட்ரோல் போடும் பால்காரர் கூட பெட்ரோலில் ஜிஎஸ்டி வரியைக் கட்டுகிறார். பெட்ரோலில் ஜிஎஸ்டி கட்ட முடியவில்லை என பால்காரர் நீதிமன்றத்தை நாடுகிறார?

நீங்கள் எவ்வளவு கார் வேண்டுமானாலும் வாங்குங்கள் ஆனால் செலுத்தும் தொகையை முழுமையாகச் செலுத்துங்கள். மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையைப் பயன்படுத்தும் போது வரியைச் செலுத்த வேண்டியது தானே?

எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்பதை வணிக வரித் துறை கணக்கீடு செய்து பகல் 2.15 க்குள் கூறவேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.

அதன்பின், சொகுசு மகிழுந்துக்கு மீதமுள்ள 50% வரியான ரூ.30.3 இலட்சத்தைக் கட்ட நடிகர் தனுஷுக்கு 48 மணி நேரம் அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Posts