சினிமா செய்திகள்

விக்ரமின் வீரதீரசூரன் வெளியீட்டுத் தேதி இதுதான்

நடிகர் விக்ரமின் 62 ஆவது படம் வீரதீரசூரன். விஜய்சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும்,சேதுபதி,சிந்துபாத் ஆகிய படங்களையும் சித்தார்த் நடித்த ‘சித்தா’ படத்தையும் இயக்கிய இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். இந்நிலையில், இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.படத்தொகுப்பை பிரசன்னா கவனிக்கிறார்.

இந்தப்படம் இரண்டு பாகங்களாகத் தயாராகவிருக்கிறது. இதுவரை இல்லாத மாதிரி படத்தின் இரண்டாம்பாகத்தை முதலில் வெளியிடுவதென்றும் முதல் பாகத்தை இரண்டவதாக வெளியிடுவதென்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

மதுரையைக் கதைக்களமாகக் கொண்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 21 ஆம் தேதி மதுரையில் தொடங்கியது.அப்போது முதல் விட்டு விட்டு நடந்த படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துவிட்டது.இப்போது படப்பிடிப்புக்குப் பிறகான பணிகள் நடந்து வருகின்றன.

ஏற்கெனவே, இப்படம் குறித்த அறிமுகக் காணொலி முதல்பார்வை புகைப்படம் மற்றும் விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு காணொலி ஆகியனவற்றைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படம் முழுமையாகத் தயாராகுமுன்பே இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமை விற்பனை ஆகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை ஃபைவ் ஸ்டார் செந்தில் பெற்றிருக்கிறார்.எம் ஜி எனப்படும் குறைந்தபட்ச பாதுகாப்பு வியாபார முறை அடிப்படையில் சுமார் 21 கோடி கொடுத்து இந்த உரிமையை அவர் பெற்றிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இதற்கடுத்த வியப்பாக இப்படத்தின் இணைய ஒளிபரப்பு மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை விற்பனை நடந்திருக்கிறது.

இவ்விரண்டு ஒளிபரப்பு உரிமை விலை சுமார் அறுபது கோடி என்கிறார்கள்.இது திரையுலகினரிடையே ஆச்சரியத்தையும் படக்குழுவினரிடம் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

வெளியீட்டுக்கு முன்பே முக்கிய வியாபாரங்கள் நடந்துவிட்டதால்,இப்படத்தை இவ்வாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியிடத் திட்டமிட்டிருந்தார்கள்.தொடக்கத்தில் விடாமுயற்சி அப்படம் இல்லையென்றானதும் நிறையப் படங்கள் அறிவிக்கப்பட்டுவிட்டன.

அதனால் இப்படத்தின் வெளியீட்டுத்தேதி தள்ளி வைக்கப்பட்டது.

இப்போது இப்படத்தை ரமலான் பண்டிகையையொட்டி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.இவ்வாண்டு ரமலான் விடுமுறை மார்ச் 31 அன்று வருகிறது.

அதனால் இப்படத்தை அதற்கு முந்தைய வியானழன்று அதாவது மார்ச் 27 ஆம் தேதி வெளியிடவிருக்கிறார்கள்.இதனால் ஐந்து நாட்கள் நல்ல வசூல் இருக்கும் என எண்ணி படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று சொல்கிறார்கள்.

Related Posts