சினிமா செய்திகள்

ஊசி மணி பாசி மணி விற்ற பெண் கதாநாயகியாகிறார் – ஆச்சரிய நிகழ்வு

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா விழாவில், பாசி மணிகள் விற்கும் பெண் ஒருவரின் புகைப்படம் மற்றும் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வந்தது. அவரது காந்தப் பார்வை திரைப்பட நடிகைகளைப் போன்று இருப்பதாக பலரும் கருத்துகளை தெரிவித்து வந்தனர்.

இதனால் ஏராளமானோர் அந்தப் பெண்ணைச் சுற்றிச் சுற்றி புகைப்படம் எடுப்பதும், பேட்டி எடுப்பதுமாக உள்ளனர்.

கும்பமேளாவில் அனைவரது கவனத்தை ஈர்த்த அந்த பெண்ணின் பெயர் மோனலிசா போஸ்லே. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த அவர்களது குடும்பம், பல தலைமுறைகளாக பாசி, மணி, மாலைகளை விற்று வாழ்க்கையை நடத்தி வருகிறது. மோனலிசா தனது பெற்றோருக்கு உதவுவதற்காக சிறுவயதிலிருந்தே பாசி, மணி மாலைகளை விற்பனை செய்து வருகிறார்.

அவர், மகா கும்பமேளாவில் பாசி, மணி, மாலைகளை விற்க பிரயாக்ராஜுக்கு வந்தார். அங்கே, மோனலிசாவின் அப்பாவித்தனமான முகமும், அவரது அழகிய கண்களும் பலரது கண்களைக் கவர்ந்தன. மோனலிசா குறித்த செய்திகள் அதிகமாகப் பேசப்படுவதால்,அவர் மீது கவனம் குவிந்துள்ளது.அவரை மேற்கொண்டு அழகுபடுத்தும் பணிகளும் நடந்துவருகின்றன.

இந்நிலையில்,அனைவரும் ஆச்சரியப்படும் வகையில், அவருக்கு இந்தித் திரையுலகிலிருந்து நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்தித் திரைப்பட இயக்குநர் சனோஜ் மிஸ்ரா தனது படத்தில் மோனலிசாவுக்கு வாய்ப்பு வழங்க உள்ளதாகக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்….

மோனலிசாவின் உருவத் தோற்றமும், அவரது அப்பாவித்தனமும் என்னை மிகவும் கவர்ந்தது. எனது ‘டைரி ஆஃப் மணிப்பூர்’ என்ற படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்க விரும்புகிறேன். இந்தப் படத்திற்கு இப்படி ஒரு பெண்ணைத் தேடிக்கொண்டிருந்தேன். ஒரு விவசாயியின் மகளாக நடிக்க மோனலிசா சரியான பொருத்தமாக இருப்பார் என்று கருதுகிறேன். அவரை விரைவில் சந்திக்க உள்ளேன். அவருக்கு முறையாக நடிப்பு கற்றுக் கொடுத்து பின்னர் எனது படத்தில் நடிக்க வைப்பேன்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதனால் ஒரே நாளில் இந்திய ஒன்றியம் மட்டுமின்றி இந்திய மக்கள் வாழுமிடங்களில் எல்லாம் அறிமுகமாகிவிட்டார்.

இது யாரும் எதிர்பாராத வியக்கத்தக்க நிகழ்வு என்று பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

Related Posts