சினிமா செய்திகள்

வாரிசு பட திருச்சி விநியோகஸ்தரின் வியப்பூட்டும் செயல்

2023 தமிழர்திருநாளாம் பொங்கலையொட்டி விஜய் நடித்துள்ள வாரிசு அஜீத் நடித்துள்ள துணிவு ஆகிய இரண்டுபடங்கள் வெளியாகவிருக்கின்றன.

இவ்விரு படங்களுமே நாளை அதாவது சனவரி 11 ஆம் தேதியே வெளியாகவிருக்கின்றன. 11 ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு துணிவு படம் திரையிடப்படவிருக்கிறது. அதிகாலை நான்கு மணிக்கு வாரிசு படம் திரையிடப்படவிருக்கிறது.

இவ்விரு படங்களில் துணிவு படத்தைத் தமிழ்நாடெங்கும் உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது.

வாரிசு படத்தை, சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு மற்றும் கோவை ஆகிய ஐந்து விநியோகப் பகுதிகளில் உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய விநியோகப்பகுதிகளில் வெவ்வேறு விநியோகஸ்தர்கள் மினிமம் கியாரண்டி அடிப்படையில் வாரிசு படத்தை வாங்கியிருக்கிறார்கள்.

ரெட்ஜெயண்ட் நிறுவனம் படங்களை வாங்கி வெளியிட முன்வந்ததிலிருந்து இப்படி வியாபாரம் நடந்ததாகச் செய்திகள் இல்லை.

அதனால், படவெளியீட்டின் கடைசி நேரத்தில் ஏற்படும் சிக்கல்களும் இல்லாமல் இருந்தது.

இப்போது வாரிசு படத்தை இந்நான்கு பகுதிகளிலும் பெரிய விலைக்கு விற்றிருக்கிறார்கள். ரெட்ஜெயண்ட் நிறுவனத்தோடு போட்டி போட வேண்டிய கடினமான சூழல் வேறு இருக்கிறது.

இதனால்,இந்நான்கு பகுதி விநியோகஸ்தர்களும் வாரிசு படத்துக்குச் சொன்னபடி பணம் கொடுத்து படத்தை வாங்கி விடுவார்களா? என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.அவர்கள் பின்வாங்கிவிடுவார்கள் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில்,திருச்சி விநியோகப்பகுதிக்காக வாரிசு படத்தை வாங்கியிருக்கும் ராது இன்போடெயின்மெண்ட் வி.எஸ்.பாலமுரளி,நேற்று காலையே அதாவது சனவரி 9 ஆம் தேதி காலையிலேயே பேசியபடி மொத்தப்பணத்தையும் கொடுத்துவிட்டு திரையரங்குகள் பட்டியலைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

வி.எஸ்.பாலமுரளி, திரைப்பட விநியோகத்தில் பல்லாண்டுகள் அனுபவம் வாய்ந்த நாராயணசாமி ஆகியோர் திருச்சி விநியோகப்பகுதிகளில் முதல்தர அரங்குகளை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம். அதோடு திரையரங்குக்காரர்களிடமிருந்து முன் தொகை வாங்கி தயாரிப்பாளரிடம் கொடுப்போம் எனக்காத்திருக்காமல் தங்கள் சொந்தப்பணத்தைக் கொடுத்து வியாபாரத்தை நிறைவு செய்திருக்கிறார்கள்.

அந்தப்பகுதிக்கான விலை சுமார் எட்டுகோடி என்பதால் அவ்வளவு வசூலாகுமா? என்கிற எதிர்க்கருத்துகளையும் மீறி ஒரு விநியோகஸ்தர் இரண்டுநாட்களுக்கு முன்பே மொத்தப்பணத்தையும் கொடுத்திருப்பது திரைப்பட வியாபார வட்டத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Posts