அஜீத்தை விட விஜய் பெரிய நடிகர் – தயாரிப்பாளர் பேட்டியால் பரபரப்பு
2023 பொங்கல் திருநாளையொட்டி தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு மற்றும் எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள துணிவு ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இவற்றில் துணிவு படத்தை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
வாரிசு படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் பெற்றுள்ளார். சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் உள்ளிட்ட சில விநியோகப்பகுதிகளில் வாரிசு படத்தைத் திரையிடும் உரிமையை ரெட்ஜெயண்ட் நிறுவனம் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
திருச்சி, திருநெல்வேலி, மதுரை, சேலம் உள்ளிட்ட மற்ற பகுதிகளில் வெவ்வேறு விநியோகஸ்தர்கள் வாரிசு படத்தை வெளியிடவிருக்கிறார்கள்.
இந்நிலையில், வாரிசு படத்தைத் தயாரித்துள்ள தயாரிப்பாளர் தில்ராஜு, தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், வாரிசு படத்துக்கு உரிய அளவில் திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் விஜய் நம்பர் ஒன் நடிகர், அஜீத்தை விட விஜய் பெரிய நடிகர். ஆனால் வாரிசு படத்துக்குத் திரையரங்குகள் கிடைப்பது கடினமாக உள்ளது. இதற்குக் காரணம் துணிவு படத்தை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுவதுதான். இச்சிக்கலை எதிர்கொள்வது குறித்துப் பேச நான் சென்னை செல்கிறேன் என்று பேட்டி கொடுத்துள்ளார்.
ஏற்கெனவே விஜய் படமும் அஜீத் படமும் ஒரேநாளில் வெளியாவதால்,எந்தப்படம் வெற்றி பெறும் என்கிற எதிர்பார்ப்பு நிலவிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தில்ராஜுவின் இந்தப்பேட்டி பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.











