181 – திரைப்பட விமர்சனம்
எவ்வளவு விழிப்புணர்வுகள் எவ்வளவு விவாதங்கள் எவ்வளவு எச்சரிக்கைகள் இருந்தாலும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறையவே இல்லை என்கின்றன புள்ளிவிவரங்கள்.
அதனால் அவற்றிற்கான எதிர்வினைகளும் வந்துகொண்டேயிருக்கின்றன. அந்த வரிசையில் சேர்ந்திருக்கும் படம் 181.
ஒரு திரைப்பட இயக்குநர் புதிய திரைக்கதை எழுதுவதற்காக ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு பண்ணைவீட்டுக்குப் போகிறார். கூடவே அவர் மனைவியையும் அழைத்துப் போகிறார். போன இடத்தில் பேய் இருப்பதை இருவரும் தனித்தனியாக உணர்கின்றனர். அங்கிருந்து வெளியேற நினைத்தாலும் முடியவில்லை. இறுதியில் என்னவானது? என்பதைப் படபடப்புடன் சொல்லியிருக்கிறது படம்.
நாயகன் ஜெமினி நாயகிகள் ரீனாகிருஷ்ணன், காவ்யா ஆகியோர் ஏற்றுக்கொண்ட வேடத்துக்கு ஏற்ப நடிக்க முயன்றிருக்கிறார்கள்.
ஒரு பண்ணைவீட்டுக்குள்ளேயே பெரும்பகுதி படமாக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் பல வேறுபாடுகளைக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரசாத்.
பேய்ப்படங்களில் இசைக்குக் கூடுதல் முக்கியத்துவம் உண்டு. அவற்றை உணர்ந்து இசையமைத்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் ஷமீல்ஜே.
படத்தின் தொடக்கத்தில் இடம்பெற்றுள்ள, பேய் பற்றிக் கதை எழுதுவதற்காக பேய் இருக்கும் இடத்துக்குப் போகும் கதாசிரியர் காட்சி,இறுதியில் உண்மை தெரிந்ததும் நாயகனும் நாயகியும் செய்யும் செயல்கள் ஆகியன சுவாரசியம்.
பேய்கள் என்பவை நீதியின் பிரதிநிதிகளாகப் பல நேரங்களில் இருக்கும் இந்தப்படத்திலும் அப்படித்தான்.
பேய் ஏன் பேயானது? என்பதற்கான காட்சிகளைப் பார்க்கும்போது நமக்கும் பேய் உணர்வு வருகிறது.
அண்ணா வலிக்குதுன்னா விட்டுடுங்கண்ணா என்று அப்பெண் கதறுவது நாம் நிஜத்தில் கேட்ட கொடூரம். அக்கொடூரத்தைச் செய்தவர்களுக்கு மக்கள் மனதில் நினைத்ததைப் போன்ற தண்டனையைப் படத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குநர் இஷாக்.











