விஜய்க்குத் தூது விட்ட கமல் – ஆசை நிறைவேறுமா?
கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தற்போது கமல், விஜய்சேதுபதி, ஃபகத்பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள விக்ரம் படத்தைத் தயாரித்திருக்கிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படம் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இதற்கடுத்து மேலும் சில படங்களைத் தயாரிக்க அந்நிறுவனம் முயன்று வருகிறது.
அதனடிப்படையில்தான். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தை அறிவித்திருக்கிறார்கள்.
அதோடு, முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் ஒரு படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டனர். ஆர்யா அதிகச் சம்பளம் கேட்கிறார் என்று சொல்லி அப்படத்தைத் தயாரிக்கும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டனர்.
இந்நிலையில், ராஜ்கமல் தயாரிப்பில் விஜய்யை வைத்து ஒரு படம் தயாரிக்கலாம் என ஆசைப்படுகின்றனராம்.
இதற்காக, அடுத்து விஜய் படத்தை இயக்கவிருக்கும் லோகேஷ்கனகராஜை தூது அனுப்பினார்களாம்.
அடுத்து லோகேஷ் கனகராஜ் விஜய் ஆகிய இருவரும் இணையும் படத்தை லலித்குமார் தயாரிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அந்தப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் மூலம் தயாரிக்கத் தயார் என்றும் அப்படியில்லையென்றாலும் அதற்கடுத்து ஒரு படம் நடித்துக் கொடுங்கள் என்றும் கேட்டிருக்கிறார்களாம்.
கமல் சார்பாக விஜய்யிடம் இதைக் கேட்பதற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ்,ஐதராபாத் போய்வந்ததாகச் சொல்லப்படுகிறது.
விஜய் என்ன முடிவெடுக்கப் போகிறார்? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும் என்கிறார்கள்.












