கமல் தயாரிப்பில் உதயநிதி நடிக்கும் படத்தின் பெயர்
மகிழ்திருமேனி இயக்கத்தில், உதயநிதி நடிப்பில் உருவாகியிருக்கும் கலகத்தலைவன் படம் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது.
இப்போது மாரிசெல்வராஜ் இயக்கும் மாமன்னன் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் உதயநிதி.
அவர் தீவிர அரசியலிலும் இருந்துவருவதால் மாமன்னன் படம்தான் அவர் நடிக்கும் கடைசிப்படம் என்று சொல்லப்பட்டது.
ஆனால், நெஞ்சுக்குநீதி வெற்றிவிழாவில் பேசும்போது, மாமன்னன் படம்தான் என் கடைசிப்படம் என்று சொல்கிறார்கள். அப்படியில்லை, நல்ல கதைகள் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியிருந்தார் உதயநிதி.
அப்படிச் சொன்ன சில நாட்களிலேயே, கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவிருப்பதாக அறிவித்தார் உதயநிதி.
அதன்பின் அப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை என்றாலும் அந்தப்படத்தை இயக்கப்போவது, கிடாரி, குயின் இணையத்தொடர் ஆகியனவற்றை இயக்கிய பிரசாந்த் முருகேசன் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
அந்தத் தகவல் உண்மைதான் என்றும் பிரசாந்த்முருகேசனின் கதைதான் இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது என்றும் விசயமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
அறம் வழுவா அரசனை மையமாகக் கொண்டு வரலாற்றுக் காலகட்டத்தைத் தற்போதைய காலகட்டத்தோடு இணைத்து ஒரு கதை எழுதியிருந்தாராம் இயக்குநர் பிரசாந்த் முருகேசன்.
செங்கோல் என்கிற பெயரைக் கொண்ட அந்தக்கதை, உதயநிதியின் திரைப்படப் பயணம் மட்டுமின்றி அரசியல் பயணத்துக்கும் பயன்படும் வண்ணம் அமைந்திருக்கிறதாம்.
அந்தக்கதைக்காகவே பிரசாந்த் முருகேசனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
கலகத்தலைவன், மாமன்னன் ஆகியனவற்றைத் தொடர்ந்து செங்கோல் எனும் தலைப்பு. உதயநிதியின் எதிர்காலத்துக்கேற்ப எல்லாம் அமைக்கப்படுகின்றனவோ?












