என்னுடைய தனித்துவம் இவைதான் – இசையமைப்பாளர் ஆர்.எஸ்.ரவிப்ரியன் பேட்டி
முழுக்க முழுக்க கனடா நாட்டில் தயாரான தமிழ்த்திரைப்படம் ஹை 5. மனித உறவுகளின் மேன்மைகளைப் பேசும் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில் நடந்தது.
அப்படத்துக்கு இசையமைத்திருப்பவர் ஆர்.எஸ்.ரவிப்ரியன்.
திருநெல்வேலி சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர். படிப்புக்காக வெளிநாடு போனவர், அங்கேயே இசையமைப்பாளராக ஆகிவிட்டார். இருபதாண்டுகளுக்கு முன்பாகவே எஸ்பிபி உட்பட 22 புகழ்பெற்ற பாடகர்களைப் பாடவைத்து காற்று என்கிற 11 பாடல்கள் கொண்ட பாடல்தொகுப்பை வெளியிட்டுப் புகழ் பெற்றவர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைப்படங்களுக்கு இசையமைப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.
தற்போது ஹை 5, கறுப்பு வலை, சூரியனும் சூரியகாந்தியும், கரிமூட்டம் உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
லிட்டில் மேஸ்ட்ரோ, திருக்குறள் இசைக்கவி உள்ளிட்ட சில விருதுகளும் இவருக்குக் கிடைத்திருக்கின்றன.
அவருடன் ஒரு சந்திப்பு…
ஹை 5 படத்துக்கு இசையமைத்தது பற்றி…?
இப்படத்தில் ஐந்துபாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகவிருக்கிறது. அதனால் ஐந்து பாடல்கள் என்றாலும் மூன்று மொழிகளுக்கும் வெவ்வேறு பாடகர்களைப் பாட வைத்திருக்கிரோம். இப்பட வேலைகள் பலவற்றை நான் கனடாவில் இருந்து இணையம் மூலம் ஒருங்கிணைத்துச் செய்தேன். பாடல்கள் சிறப்பாக அமைந்திருக்கின்றன.
காற்று பாடல் தொகுப்பு அதன்பின் மேகம், சாந்தன் ஆகிய படங்களுக்குப் பிறகு பெரிய இடைவெளி ஏன்?
சிறுவயதிலேயே இசையமைப்பில் ஈடுபடத்தொடங்கினேன். இசையார்வம் காரணமாக குடும்பத்தில் சில சிக்கல்கள். அதனால் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. இப்போது அதை ஈடுகட்டும் விதமாக வேகமாக இயங்கத் தொடங்கியிருக்கிறேன்.
திரைப்படப் பாடல்களோடு தனியிசைப் பாடல்களிலும் கவனம் செலுத்துகிறீர்களே. ஏன்?
கவிஞர் செண்பாவுடன் இணைந்து சுமார் நூற்றுமுப்பது பாடல்கள் உருவாக்கியிருக்கிறோம். எழுதிய பாடல்களுக்கு இசையமைக்கும்போது பல சுதந்திரங்கள் இருக்கின்றன.அதற்குக் கிடைக்கும் வரவேற்புகள் ஊக்கமுடன் இயங்க வைக்கின்றன.
மெல்லிசைப் பாடல்கள் துள்ளிசைப் பாடல்கள் ஆகியனவற்றில் உங்கள் கவனம் எதில் அதிகமாக இருக்கும்?
திரைப்படங்களுக்கு இசையமைக்கும்போது அக்கதைச் சூழல்களுக்கேற்ற பாடல்களைத்தான் உருவாக்கியாகவேண்டும். அதனால் மெல்லிசை துள்ளிசை இந்த இராகம் என்றெல்லாம் பார்க்கமாட்டேன். கதைக்கேற்ற பாடல்களை உருவாக்குவேன்.
தொடர்ந்து கனடாவிலேயே இருக்கப்போகிறீர்களா? அங்கிருந்தே இசையமைப்பதில் சிக்கல்கள் உண்டே?
தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட இக்காலத்தில் தூரம் ஒரு சிக்கல் இல்லை ஆனாலும் இயக்குநர்கள் மற்றும் பாடகர்களுடன் சேர்ந்து வேலை செய்யும்போது கிடைக்கும் ஈடுபாடு அலாதியானது. அதற்காகவே சென்னைக்கு வந்துவிட்டேன். இனி இங்கிருந்தே பணிகள் செய்யப்போகிறேன்.
உங்கள் தனித்துவமாக எதைச் சொல்வீர்கள்..?
இசைக்குறிப்புகள் எழுதி அவற்றைப் பல்வேறு இசைக்கலைஞர்களை இசைக்க வைத்துப் பாடல் உருவாக்குவதைவிட அக்கலைஞர்களின் திறமைகளை அங்கீகரித்து அவர்கள் சுதந்திரத்திற்கு பணிபுரியவிட்டு அவற்றில் எனக்குத் தேவையானதை எடுத்துக் கொள்கிறேன். இதனால் பல புதிய ஒலிகள், சந்தங்கள் கிடைக்கின்றன. அதேபோல், திரும்பத் திரும்ப பல்லவி இடம்பெறாமல் ஒருமுறை பல்லவி அடுத்தடுத்து சரணங்கள் என பாடல்கள் போவது போல் அமைக்கிறேன். அவற்றிற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
– கேகே











