சினம் – திரைப்பட விமர்சனம்
நேர்மையான காவல்துறை உதவி ஆய்வாளர் அருண்விஜய், அவருக்கு ஒரு காதல். திருமணம் நடந்து ஒரு குழந்தையுடன் அழகான வாழ்க்கை வாழ்ந்து வரும் அவருக்குத் திடீரென ஒருநாள் கடும்சோதனை. நெஞ்சு நடுங்கும் அச்சோதனையை அனுபவிக்கும் அவர், அதன்பின் அதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிப்பதுதான் சினம்.
மீசை இல்லாத நிலையிலும் காவல்துறை உதவி ஆய்வாளர் வேடத்துக்குரிய மிடுக்குடன் இருக்கிறார் அருண்விஜய். அவருடைய நடை உடை பாவனைகளில் எவ்விதத் தொய்வுமில்லாமல் அழுத்தந்திருத்தமாக இருக்கிறது.காதல் காட்சிகளில் இரசிக்கவைக்கிறார். கதறும் காட்சியில் கலங்கவைக்கிறார். கோபத்தில் வெடிக்கும்போது நமக்கும் நரம்பு புடைக்கிறது.
நாயகி பாலக் லால்வாணி. அமைதியான அழகு. அன்பான மனைவி அழகான துணைவி. அவருக்கு அப்படி ஒரு துயரம் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.
தலைமைக்காவலராக நடித்திருக்கும் காளிவெங்கட் கவனிக்க வைக்கிறார். ஆணையராக வரும் ஆர்.என்.ஆர்.மனோகர் வேடம் அளவாக அமைந்திருக்கிறது. படத்தின் திருப்புமுனைக்கு உதவும் மறுமலர்ச்சி பாரதி நன்று.
ஷபீர் இசையமைத்துள்ளார். பாடல்கள் நன்றாக அமைந்திருக்கின்றன. பின்னணி இசை மிதமாக இருக்கிறது.
கோபிநாத் ஒளிப்பதிவில் காதல் காட்சிகள் இதமாகவும் கடைசிக்காட்சிகள் பயமுறுத்தவும் செய்கின்றன.
படத்தொகுப்பு செய்திருக்கும் ஏ.இராஜாமுகமதுவின் மெனக்கெடலால் படம் நிதானமாகவும் அதேசமயம் வேகமாகவும் போகிறது.
திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் ஜி.என்.ஆர்.குமரவேலன் நேர்த்தியான படைப்பைக் கொடுத்திருக்கிறார். நேர்மையான அதிகாரியின் சினமும் அவர் நடத்தும் வதமும் மிகப்பொருத்தமாக அமைந்திருக்கிறது.
மாந்த உரிமைகளுக்குப் பாதகம் செய்யும், கடுமையான தண்டனை,விசாரணையற்ற தண்டனை ஆகியனவற்றைச் சரி என்று நினைக்க வைக்குமளவுக்கு திரைக்கதை அமைந்திருப்பது இப்படத்தின் பலம்.











