ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு வந்த சோதனை
ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த கோமாளி திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். இவர் தற்போது ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி, அதில் நாயகனாகவும் நடித்துள்ளார்.அந்தப் படத்திற்கு லவ் டுடே என தலைப்பு வைத்துள்ளனர்.
அந்தப்படத்தில் நாயகியாக இவானா நடித்திருக்கிறார். இவர்களோடு சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர்.
அந்தப் படத்திற்கான இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், படத்தை முழுமையாகப் பார்த்த தயாரிப்பு நிறுவனத்தினர் பேரரதிர்ச்சி அடைந்துள்ளனராம்.
அதற்குக் காரணம், படம் மிகவும் ஆபாசமாக வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதைப்பார்த்துத்தான் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி அடைந்திருக்கிறதாம்.
ஏற்கெனவே, சுமார் மூன்று கோடிக்குள் படத்தை முடித்துவிடுவேன் என்று சொன்ன இயக்குநர், ஐந்து கோடி வரை செலவு இழுத்துவிட்டுவிட்டாராம்.
இதனால் கோபத்தில் இருந்த தயாரிப்பு நிறுவனம் படத்தை முழுமையாகப் பார்த்து இன்னும் கோபமாகிவிட்டார்களாம். அந்த அளவுக்குக் காட்சிகள் மற்றும் வசனங்களில் ஆபாச அலங்கோலங்கள் இருக்கின்றனவாம்.
படத்தின் முன்னோட்டம் வெளியிடத் திட்டமிட்டு அதை தணிக்கைக்கு அனுப்பினால் அதற்கே ஏ சான்றிதழ் தான் கிடைக்கும் என்கிற நிலையாம்.
இதுவரை ஏஜிஎஸ் நிறுவனத்தின் படங்கள் என்றால் தரமான படங்களாக இருக்கும் என்கிற பெயரைப் பெற்றிருக்கிறோம். இந்தப்படம் வெளியானால் அந்தப் பெயருக்குப் பங்கம் வரும் என்று யோசிக்கிறார்களாம்.
எடுத்தது எடுத்தபடி இருக்கட்டும் அப்படியே வெளியிடலாம் என்றும் இல்லையில்லை படத்தில் திருத்தங்கள் செய்து யு சான்றிதழ் படமாக மாற்றலாம் என்றும் இருவேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டு வருகிறதாம்.
என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள்? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும் என்கிறார்கள்.











