சினிமா செய்திகள்

தயாரிப்பாளர்களை நோஞ்சான் என்று சொன்னது ஏன்? – பாரதிராஜா விளக்கம்

பாரதிராஜாவை தலைவராகக் கொண்டு ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற புதிய சங்கத்தை உருவாக்கியுள்ளனர்.இச்சங்கத்தின் செயலாளராக டி.சிவா பொருளாளராக டிஜி.தியாகராஜன் உட்பட இதன் நிர்வாகிகள் அனைவருமே போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலகத் திறப்பு விழா சென்னையில் இன்று (செப்டம்பர் 14) நடைபெற்றது. இதில் பாரதிராஜா, டி.சிவா, தியாகராஜன், எஸ்.ஆர்.பிரபு, தனஞ்செயன், சுரேஷ் காமாட்சி, லலித்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய பாரதிராஜாவிடம்,தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இருந்த போது திரையரங்கு உரிமையாளர்களிடம் கோரிக்கைகளை வைக்காமல் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட நீங்கள் இவ்வாறெல்லாம் கோரிக்கை வைப்பதால் அது நிறைவேறுமா? என்று கேட்டதற்கு, ஆயிரம் நோஞ்சான்கள் இருப்பது பெரிதா? நூறு வலுவானவர்கள் இருப்பது பலமா? என்று கேட்டார்.

இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றுவரை நீங்களும் இருந்த சங்கத்தில் ஆயிரம் நோஞ்சான்கள் என்று சொல்லியிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது இதற்காக நீங்கள் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று பல தயாரிப்பாளர்கள் கோபமாகக் கூறினர்.

இதைத் தொடர்ந்து பாரதிராஜா வெளியிட்டுள்ள குரிப்பில்,

வணக்கம்,என் பாசத்துக்குரிய தயாரிப்பாளர்களே,இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் “நோஞ்சான்”என்கின்ற வார்த்தை நம் சக தயாரிப்பாளர்களை காயப்படுத்தும் விதமாகப் பேசியிருப்பதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.

திரைத் துறையில் முதலாளித்துவமாக இருந்த தயாரிப்பாளர்கள்,இன்று யார் யாருக்கோஅடிபணிந்து , ஒடுக்கப்பட்டு
செயலற்ற நிலையில் திரியும்அவல நிலையைக் கண்டு கோபத்தில் வெளிவந்த வார்த்தைதான் தவிர வேறு எந்த உள்நோக்கத்துடன் நான் கூறவில்லை.மனதை காயப்படுத்தும் விதமாகப் பேசவெண்டும் என்கிற திட்டமிடுதல்
இல்லை.

இந்த வார்த்தை நம் தயாரிப்பாளர்களை உண்மையிலே காயப்படுத்திருந்தால், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்று அர்த்தம்.

நன்றி
அன்புடன்

பாரதிராஜா

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Posts