இந்தியன் 2 வில் இணைந்த சத்யராஜ் – சுவாரசிய காரணம்
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2. இப்படம் 2018 ஆம் ஆண்டே தொடங்குவதாகச் சொல்லப்பட்டது. பல்வேறு தடைகள் காரணமாக 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
2020 பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு, ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கோர விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் கிருஷ்ணா, மதுசூதனராவ், சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்திலிருந்து நூலிழையில் படக்குழுவினர் பலரும் உயிர் தப்பினர்.
பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி அரங்கில் இந்த விபத்து நடந்தது.
இவ்விபத்து நடந்த அடுத்த மாதமே கொரோனா ஊரடங்கு தொடங்கியதால் படப்பிடிப்பு மொத்தமாக நின்றது.
அதன்பின் பல்வேறு இடையூறுகளைக் கடந்து இரண்டாண்டுகளுக்குப் பின் இப்போது மீண்டும் இந்தியன் 2 படத்தின் வேலைகள் தொடங்கியிருக்கின்றன.
ஆகஸ்ட் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. அதற்காக பிரமாண்ட அரங்குகள் அமைக்கும் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.
இன்னொரு பக்கம் திரைக்கதையிலும் சில மாற்றங்களைச் செய்திருக்கிறாராம் இயக்குநர் ஷங்கர். அதன்படி ஒரு புதிய கதாபாத்திரம் படத்தில் இடம்பெறவிருக்கிறதாம்.
அக்கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பவர் சத்யராஜ்.இப்படத்தில் அவருக்குக் காவல்துறை உயரதிகாரி வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.
அதைவிடச் சுவாரசியமாக, இதுவரை கமலும் சத்யராஜும் சேர்ந்து நடித்த காக்கிச்சட்டை, விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் அவர்கள் எதிரும்புதிருமாகப் பேசிக்கொண்ட வசனங்களை வைத்துக் காட்சிகள் எழுதப்பட்டிருக்கின்றனவாம். இதைக் கேட்டதும் கமல் மற்றும் சத்யராஜ் ஆகிய இருவரும் உற்சாகமாகிவிட்டனராம்.
அக்காட்சிகள் திரையில் வரும்போது அரங்கம் அதிர்வது உறுதி என்று சொல்கிறார்கள்.











