பிரபல தயாரிப்பாளரிடம் சரணடைந்த விஷால்
விஷால் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் இரும்புத்திரை, சண்டக்கோழி 2 ஆகிய இரண்டு படங்களையும் அவரே தயாரித்துக் கொண்டிருக்கிறார்.
அவற்றில் இரும்புத்திரை படம் முழுமையாகத் தயாராகிவிட்டதாம். வேலைநிறுத்தம் இல்லாமலிருந்தால் மார்ச் 29 அன்று வெளியாகியிருக்கும்.
அப்படம் வெளியாக வேண்டுமானால் அப்படம் தொடர்பாக வாங்கியிருக்கும் கடன் மற்றும் விஷாலின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கெனவே வைத்திருக்கும் கடன் ஆகியனவற்றை செட்டில் செய்தாகவேண்டும்.
அதற்கு விஷாலின் நிதிஇருப்பு இரும்புத்திரை வியாபாரம் ஆகியன மட்டும் போதாது எனும் நிலைமையாம்.
பிரபல நிதியாளர் மதுரை அன்புவுடனான மோதல் காரணமாக அவருக்குக் கொடுக்கவேண்டியவற்றை மொத்தமாகக் கொடுக்கவேண்டிய கட்டாயம்.
இக்காரணங்களால், லைகா நிறுவனர் சுபாஷ்கரனிடம் விஷால் சரணடைந்துவிட்டார் என்று சொல்கிறார்கள்.
அவரைச் சந்தித்து, எனக்கு இவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றைத் தீர்க்க இவ்வளவு தொகை தேவைப்படுகிறது. இரும்புத்திரை, சண்டக்கோழி 2 ஆகிய இர்ண்டு படங்களையும் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள், எனக்குப் பணம் தாருங்கள் என்று கேட்டிருக்கிறார்.
கைவசம் நிறையப் படங்கள் இருந்தாலும் விஷால் கேட்டுக் கொண்டதற்கிணங்க விஷாலுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்து அவரை நெருக்கடியிலிருந்து மீட்டுவிட்டாராம் சுபாஷ்கரன்.
எனவே, இரும்புத்திரை, சண்டக்கோழி 2 ஆகிய படங்களை லைகா நிறுவனம் வெளியிடவிருக்கிறதாம்.











