சினிமா செய்திகள்

இந்தியன் 2 குறித்த முக்கிய விவாதம் – ஷங்கர் எடுத்த முடிவு

கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2.ஷங்கர் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் 2018 ஆம் ஆண்டே தொடங்குவதாகச் சொல்லப்பட்டது. பல்வேறு தடைகள் காரணமாக 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

2020 பிப்ரவரி 19 ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த கொடூர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.அதனால் அப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது.

அதன்பின் படப்பிடிப்பு நடக்கவில்லை. மார்ச் 25 முதல் கொரோனா காரணமாக ஊரடங்கு தொடங்கிவிட்டதால் எல்லா வேலைகளும் அப்படியே நின்றுவிட்டன.

இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்புப் பொறுப்பிலிருந்து லைகா நிறுவனம் விலகிக் கொள்ள முன்வந்திருக்கிறதென்றும் சன் பிக்சர்ஸ் இப்படத்தின் தயாரிப்புப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இன்னொரு பக்கம், இதுவரை எடுத்த காட்சிகளைத் தொகுத்துப் பார்த்தால் ஆறு மணி நேரத்துக்கும் மேலாகப் படம் இருக்கிறதாம். இன்னும் படப்பிடிப்பு முழுமையடையாத நிலையிலே இவ்வளவு நேரம் படம் இருக்கிறதாம்.

இதனால் ஊரடங்குக்காலத்தில் தன் குழுவினருடன் உரையாடிய போது இந்தியன் 2 படத்தையே இரண்டு பாகங்களாக்கி விடலாமா? என்று கேட்டிருக்கிறார். அதிலுள்ள சாதக பாதக அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

கடைசியில் அம்முடிவைக் கைவிட்டுவிட்டார்களாம்.இதற்கே இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தவேண்டும் எனும்போது இன்னொரு படம் என்றால் அதற்காக இன்னும் மெனக்கெட வேண்டும். ஏற்கெனவே தயாரிப்பு நிறுவனம் தொடர்பான சிக்கல் ஒருபுறம், நிறுவனத்துக்கும் கமலுக்குமான மோதல் ஒருபுறம் என்று பல சிக்கல்கள் இருக்கும்போது இப்படி ஒரு யோசனையைக் கூட வெளிப்படுத்த வேண்டாம் என்கிற முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதாம்.

Related Posts