சினிமா செய்திகள்

ஒரு சின்ன மாற்றத்துடன் மாஸ்டர் படத்துடன் வெளியாகும் சூரரைப்போற்று

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ளது இந்தப்படம்.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதன் காரணமாக சூரரைப் போற்று படம் நேரடியாக இணைய தளத்தில் வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 30 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்கியுள்ள சன் தொலைக்காட்சி தீபாவளி நாளில் படத்தை ஒளிபரப்ப எண்ணியதாம். இணையத்தில் வெளியாகி இரண்டு வாரங்களுக்குள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் அது இணைய பார்வையாளர்களைப் பாதிக்கும் என்பதால் தள்ளிப்போடும்படி கேட்டுக் கொண்டார்களாம்.

அதனால் 2021 சனவரியில் பொங்கல் விடுமுறை நாட்களில் சூரரைப்போற்று படத்தை ஒளிபரப்ப சன் தொலைக்காட்சி முடிவு செய்துள்ளதாம்.

இப்படம் தயாரானதிலிருந்தே விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாகும் நாளில் இப்படமும் வெளியாகலாம் என்று சொல்லப்பட்டுவந்தது.

இப்போது அதேபோல் நடக்கிறது. அதில் சின்ன மாற்றம். பெரிய திரையில் மாஸ்டர் வெளியாகிறது. சூரரைப்போற்று சின்னத்திரையில் வெளியாகிறது.

Related Posts