விஜய்சேதுபதியின் துணிச்சல் முடிவு – திரைத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி
கொரோனா ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பே தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் இரத்து செய்யப்பட்டன.அதன்பின், இயக்குநர் சுசீந்திரன் மற்றும் கார்த்திக்ராஜு ஆகியோர் தங்கள் படங்களின் படப்பிடிப்புகளை நடத்திமுடித்துள்ளனர்.
முதன்முதலில் ஒரு பெரிய கதாநாயகன் நடிக்கும் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.ஆம், விஜய்சேதுபதி நாயகனாக நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது.
பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்தப் புதிய படத்தில் டாப்சி நாயகியாக நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தினை தீபக் சுந்தர்ராஜன் இயக்கவுள்ளார். இயக்குநர் ஏ.எல்.விஜய்யிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ள இவர், நடிகர் மற்றும் இயக்குநரான சுந்தர்ராஜனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் ஜெகபதி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்புதான் ஜெய்ப்பூரில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்காகப் படக்குழுவினர் ஜெய்ப்பூர் சென்றுள்ளனர்.
இப்படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக நாளை விஜயசேதுபதி புறப்படுகிறார் என்றும் அடுத்த சில நாட்களில் டாப்சி படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழில் மற்ற கதாநாயகர்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ளத் தயக்கம் காட்டி வரும் நிலையில் விஜய்சேதுபதி துணிச்சலாகப் படப்பிடிப்பில் கலந்துகொள்வதால் திரைப்படத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.











