சினிமா செய்திகள்

நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தேர்தல் – முடிவுகள் விவரம்

தமிழ்த் திரையுலகில் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கென புதிய சங்கம் ஒன்று உருவாகிறது என்றும் அதன் தலைவராக பாரதிராஜா இருப்பார் என்றும் செய்திகள் வந்தன.

அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 3 ஆம் தேதி பாரதிராஜா வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில்…..

என் இனிய தயாரிப்பாளர்களே…

கொஞ்சம் வலியோடுதான் தொடங்குகிறேன். பிரசவம் வலி மிக்கதுதான். ஆனால் பிறப்பு அவசியமாச்சே.

அப்படித்தான் இந்த இன்னொரு முயற்சியும்… புதிய சங்கத்தின் பிறப்பும் அவசியமாகிறது.

தாய் என்பவள் இன்னொரு உயிரை இவ்வுலகிற்குப் பரிசளிப்பவள். தனக்குள்ளேயே எல்லாவற்றையும் வைத்துக் கொண்டிருப்பவள் அல்ல. தாய்க்கு ஒரு பிரசவம் எப்படி வலிக்குமோ அதே வலி பிள்ளைக்கும் இருக்கும்.

தாயிலிருந்து இன்னொன்றாய் பிரியும் குழந்தைக்கு உள்ள பெருவலியை இங்கு யாருமே பேசுவதில்லை. அதன் வலியை அப்பிள்ளை வெளிப்படுத்தாதால், அவ்வலியை நாம் உணராமலே போய்விடுகிறோம் .

ஆனாலும் நான் வெளிப்படுத்தத் தெரிந்த குழந்தை. இன்னொரு சங்கம் என்ற குழந்தை முயற்சி எனக்கு வலிக்கவே செய்கிறது. வலிக்க வலிக்கவே பிறக்க வேண்டியதும் அவசியமாகிறது.

கடந்த எனது அறிக்கையில் சக தயாரிப்பாளர்களிடம் கலந்து பேசித்தான் இன்னொரு சங்கம் பற்றி முடிவெடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தேன்.

அடிப்படைப் பேச்சு வார்த்தைகளின் போதே செய்திகள் காற்றில் கசியத் தொடங்கி சில கருத்து வேறுபாடுகளைப் பரப்பத் தொடங்கிவிடுகின்றன.

முழுமையான முடிவெடுக்கும் முன் காதுகள் முந்திக் கொண்டுவிடுகின்றன.

இப்போதைய காலகட்டத்தில் இன்னொரு சங்கம் அவசியமாகிறது.

ஒரு மடை அடைத்துக் கொண்டால் இன்னொரு மடையைத் திறப்பது போல்தான் இதுவும். நாம் செயல்பட்டே ஆண்டுகளாகிவிட்டன.

பட வெளியீடுகள், பணம் போட்டவர்களின் அபாய நிலை, எதிர்காலக் கேள்விக் குறி எல்லாவற்றிற்கும் பதில் தேடுவது முக்கியம்.

தாய் சங்கத்தை உடைக்கவில்லை. அவள் அப்படியே மெருகுற இருப்பாள். திரை வீட்டின் ஆளுமை அவள்தான். அவளை விட்டு யாரும் எங்கும் போகவில்லை. பிரித்தெடுக்கவும் இல்லை.

இது செயல்பட வேண்டிய காலகட்டம். கொரானாவினால் நுரையீரல் பாதிக்கப்பட்ட சினிமாவை நம் திரையகத்தைச் சார்ந்தவர்களே மருந்து கொடுத்து சரியாக்க வேண்டிய நேரம் இது.

கையைப் பிசைந்து கொண்டே இன்னும் எவ்வளவு நாட்கள் காத்திருப்பது? அதனால் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிர்வாகிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தறிந்து மற்ற நிர்வாகிகள் குழுவினர் விபரம் பின்னர் அறிவிக்கப்படும். பாரதிராஜாவாகிய எனது தலைமையில் உறுப்பினர் சேர்க்கை இன்றிலிருந்து தொடங்குகிறோம்.

என்று சொல்லப்பட்டிருந்தது.

இந்நிலையில் உறுப்பினர் சேர்க்கை முடிந்து நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கிற தேர்தல் நேற்று (ஆகஸ்ட் 28) நடந்தது.

தயாரிப்பாளர் கே.விஜயகுமார் தேர்தல் அலுவலராக இருந்து நடத்திய அத்தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

அதன்படி, நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்கள்….

தலைவர் – பாரதிராஜா
செயலாளர் – டி.சிவா
பொருளாளர் – டி.ஜி.தியாகராஜன்

துணைத்தலைவர்கள் – எஸ்.ஆர்.பிரபு, கோ.தனஞ்செயன்
இணைச் செயலாளர்கள் – லலித்குமார் ,சுரேஷ் காமாட்சி

செயற்குழு உறுப்பினர்களாக…

1.எஸ்.நந்தகோபால்
2.பி.மதன்
3.சி.விஜயகுமார்
4.ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன்
5.டில்லிபாபு
6.கார்த்திகேயன் சந்தானம்
7.ஆர்.கண்ணன்
8.சுதன் சுந்தரம்
9.விஜய் ராகவேந்திரா
10.ஐ.பி.கார்த்திகேயன்
11.நிதின்சத்யா
12.பி.ஜி.முத்தையா

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts