அஜீத் படத்தை நிராகரித்த மூன்று நிறுவனங்கள் – ஆச்சரிய தகவல்

ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத்,த்ரிஷா உட்பட பலர் நடித்த குட்பேட்அக்லி படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியானது.
வழக்கமாக ஒரு படம் வெளியாகும் நேரத்தில் அடுத்தபடத்தை பாதிக்குமேல் முடித்திருப்பார் அஜீத்.ஆனால் இம்முறை அப்படி நடக்கவில்லை.
குட்பேட்அக்லிக்கு பிறகு என்ன படம்? என்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.
அதற்குக் காரணம், அஜீத்,மகிழுந்துப் பந்தயத்தில் தீவிரமாக இருக்கிறார் என்பதுதான். இப்போது வெளியிடப்பட்டிருக்கும் அஜீத்தின் கார் ரேஸ் காலண்டர் அதாவது பட்டியல்படி இவ்வாண்டு அக்டோபர் வரை அவர் பல்வேறு கார் ரேஸ்களில் கலந்து கொள்ளவிருக்கிறார்.அதன்பின் குடும்பத்துக்காகச் சில மாதங்கள் ஒதுக்குவார் என்றால் அடுத்த ஆண்டு தொடக்கம் வரை அவர் சினிமாவுக்கு வரவியலாது.
எனவே தான், குட்பேட் அக்லி படத்துக்கு அடுத்து என்ன படம்? என்று முடிவு செய்வதில் அவசரம் காட்டாமல் இருக்கிறார் என்கிறது அஜீத் தரப்பு.
அதேநேரம், அடுத்த படம் குறித்த பேச்சுவார்த்தைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டேயிருக்கின்றன என்றும் அவை வெற்றிகரமாக நடக்கவில்லை என்பதால் வெளியே தெரியாமல் இருக்கிறது என்கிறார்கள்.
அஜீத்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கப் போகிறார் என்பது உறுதியாம்.இயக்குநரும் கதாநாயகனும் மட்டும் தயாரானால் போதுமா? தயாரிப்பு நிறுவனம் வேண்டுமே?
குட்பேட்அக்லி படத்தைத் தயாரித்த மைத்ரி மூபி மேக்கர்ஸ் எனும் தெலுங்குப் பட நிறுவனமே அஜீத்தின் அடுத்த படத்தையும் தயாரிக்கிறது என்று சொல்லப்பட்டது.
குட்பேட்அக்லி படம் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடியது.ஆனாலும் ஒட்டுமொத்தக் கணக்கில் படத்தைத் தயாரித்த நிறுவனத்துக்கு அப்படம் சுமார் அறுபது கோடி நட்டம் என்று சொல்லப்படுகிறது.
அதனால் அடுத்த படத்துக்கு முந்தைய படத்தைவிட சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு நடிப்பார் என்று எதிர்பார்த்தால் அதைவிட அதிகச் சம்பளம் கொடுத்தால் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டாராம்.
அதனால் அந்நிறுவனம் எங்களால் முடியாது என்று பின்வாங்கிவிட்டது.
அதன்பின் தமிழ்நாட்டில் உள்ள வேல்ஸ் நிறுவனம் அஜீத் படத்தைத் தயாரிக்க முன்வந்தது.அது தொடர்பாகப் பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்தன.இறுதியில் அந்நிறுவனமும் அஜீத் கேட்கும் சம்பளத்தைக் கொடுத்துப் படமெடுத்தால் நட்டத்தையே சந்திக்க நேரிடும் என்று சொல்லி விலகிக் கொண்டதாம்.
அதன்பின், அஜீத்தை வைத்து ஏற்கெனவே படங்கள் தயாரித்திருக்கும் சத்யஜோதி நிறுவனத்தை அணுகியிருக்கிறார்கள்.அவர்களும் அஜீத் சம்பளத்தைக் கேட்டு அதிர்ந்து ஒதுங்கிக் கொண்டார்களாம்.
இப்படி ஒன்றுக்கு மூன்று நிறுவனங்கள் அஜீத் படத்தைத் தயாரிக்க முடியாது என்று ஒதுங்கிக் கொண்டது என்பது வியப்பான செய்தி.
இப்படி எல்லா நிறுவனங்களும் விலகிப் போகுமளவுக்கு அஜீத் எவ்வளவு சம்பளம் கேட்கிறார்? முதலில் அடுத்த படத்துக்கு இருநூறு கோடி என்று சம்பளம் என்று சொல்லிக் கொண்டிருந்த அஜீத், முதல்நிறுவனம் பின்வாங்கியதும் இருபது கோடி குறைத்துக் கொண்டு நூற்று எண்பது கோடி சம்பளம். இதைக்கொடுக்கும் நிறுவனத்துக்கு அடுத்தபடம் என்று சொல்லிவிட்டாராம்.
இப்போது இணையவியாபாரம், தொலைக்காட்சி ஒளிபரப்பு வியாபாரம் மற்றும் இந்தி வியாபாரம் ஆகியன மிகவும் குறைந்துவிட்டதால் அஜீத்துக்கு இவ்வளவு சம்பளம் கொடுத்துப் படமெடுத்தால் அவ்வளவு வியாபாரம் ஆகாது என்பது எதார்த்தம்.இதைப் புரிந்து கொண்டு சம்பளவிசயத்தில் அஜீத் இறங்கிவந்தால்தான் அடுத்தபடம் குறித்த அறிவிப்பு வரும் என்று திரையுலகினர் சொல்கிறார்கள்.